தாமதமாகும் விடுதலை... கொதித்த சசிகலா... டெல்லிக்கு பறந்த டிடிவி.. பரபர பின்னணி..!

By Selva KathirFirst Published Sep 21, 2020, 11:26 AM IST
Highlights

இந்த மாத இறுதியிலேயே விடுதலையாக வாய்ப்பிருந்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்று டிடிவி தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

இந்த மாத இறுதியிலேயே விடுதலையாக வாய்ப்பிருந்தும் அதனை சரியாக பயன்படுத்தவில்லை என்று டிடிவி தினகரன் மீது சசிகலா கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சசிகலா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்தை செலுத்தவில்லை என்றால் மேலும் ஓராண்டு சசிகலா சிறையில் இருக்க வேண்டும். கடந்த 2016 பிப்ரவரி மாதம் சசிகலா சிறை செல்வதற்கு முன்பாக ஏற்கனவே இந்த வழக்கில் 21 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். எனவே அந்த 21 நாட்களை கழித்தால் வரும் ஜனவரி 27ந் தேதி வரை சசிகலா சிறையில் இருக்க வேண்டும்.

இதனை பெங்களூர் சிறை நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ளது. சசிகலா பத்து கோடி ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டார். 2021 ஜனவரி 27ல் வெளியே வருவார் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இல்லை என்றால் 2022 ஜனவரி 27 வரை சசிகலா சிறையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் குறிப்பிட வேண்டிய விஷயம் என்ன என்றால், சிறையில் நன்னடத்தையுடன் செயல்படும் கைதிகளுக்கு வாரம் 2 நாட்கள் விடுப்பு உண்டு. இந்த விடுப்பை பரோல் காலத்திற்கு கைதிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதோடு மட்டும் அல்லாமல் அந்த விடுப்பை கைதிகள் சிறையில் இருக்கும் போது பயன்படுத்தவில்லை என்றால் அதனை தன்னுடைய தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ள முடியும்.

இதற்கு சிறைக் கைதிகளில் சிறையில் நன்னடத்தையுடன் நடந்து கொண்டால் போதும். இதனை அடிப்படையாக வைத்து கடந்த 4 வருடங்களில் சுமார் 130 நாட்கள் வரை சசிகலா சிறை விடுப்பு ஈட்டி வைத்துள்ளதாக சொல்கிறார்கள். பரோலில் வெளியே வந்தால் விடுதலைக்கு தாமதமாகும் என்பதால் கடந்த நான்கு வருடத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே சசிகலா பரோலில் வந்துள்ளார். மற்றபடி அவர் அதிகாரப்பூர்வமாக சிறையை விட்டு ஒரு போதும் வெளியே வந்தததாக பதிவுகள் இல்லை. எனவே இதனை கருத்தில் கொண்டு சிறை நிர்வாகம் அறிவித்த ஜனவரி 27க்கு 4 மாதங்கள் முன்பாகவே செப்டம்பரில் சசிகலா சிறையில் இருந்து ரிலீஸ் ஆக வாய்ப்பு உள்ளது.

 

ஆனால் இதில் ஒரு சிக்கல் உள்ளது. இந்த சிறை விடுப்பை தண்டனை காலத்தில் கழித்துக் கொள்ள அனுமதிப்பது சிறை நிர்வாகத்தின் விருப்பத்திற்கு உட்பட்டது. சிறை நிர்வாகம் அனுமதித்தால் மட்டுமே சசிகலா தனது சிறை விடுப்பு நாட்களாக சுமார் 130 நாட்களை கழித்து முன்கூட்டியே விடுதலை ஆக முடியும். இதற்காக சிறை நிர்வாகத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை கடிதம் எழுதப்பட்டு அது நிலுவையில் உள்ளதாக கூறுகிறார்கள். அதே சமயம் அந்த கோரிக்கை கடிதத்தை பெங்களூர் சிறை நிர்வாகம் நிராகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை அறிந்து தான் சசிகலா கொதித்துப் போய் இருப்பதாக சொல்கிறார்கள். இத்தனை நாட்கள் சிறையில் இருந்த தான் ஈட்டிய சிறை விடுப்புகளை கூட பயன்படுத்த முடியவில்லை என்றால் எப்படி? என்று சசிகலா டிடிவியிடம் கொதித்ததாக சொல்கிறார்கள். செப்டம்பருக்கு மேல் ஒரு நாள் கூட சிறையில் இருக்க முடியாது, சிறை விடுப்பு கோரிக்கையை அவர்கள் நிராகரிக்க கூடாது, அதற்கு நீ என்ன செய்வியோ எனக்கு தெரியாது என்று ஆத்திரத்துடன் சசிகலா டிடிவியை எச்சரித்ததாகவும் சொல்கிறார்கள். இதனால் தான் டிடிவி அவசர அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

செப்டம்பரில் சசிகலா வந்துவிடுவார் என்கிற நம்பிக்கையில் தான் தனது மகளுக்கும் டிடிவி திருமண ஏற்பாடுகளை செய்துள்ளார். இந்த நிலையில் அவர் வருகை ஜனவரி வரை தள்ளிப்போனால் திருமணத்தையும் தள்ளி வைக்க வேண்டியிருக்கும். இதனால் தான் டெல்லி சென்று மூத்த வழக்கறிஞர்களை சந்தித்து சிறை விடுப்பு நாட்கள் விவகாரத்தை பயன்படுத்தி இந்த மாத இறுதிக்குள் சசிகலாவை வெளியே கொண்டு வர டிடிவி முயன்று வருவதாக சொல்கிறார்கள். மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலமாக சசிகலாவை வெளியே கொண்டுவர தற்போது டிடிவி காய் நகர்த்துவதாக சொல்கிறார்கள்.

ஆனால் இந்த விவகாரத்தில் பாஜக மேலிடம் கண் அசைக்காமல் சசிகலா விடுதலை சாத்தியம் இல்லை என்கிறார்கள். எனவே சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் பாஜகவுடன் எதுவும் திரைமறைவு உடன்பாடு செய்து கொள்ள முடியுமா என்றும் டிடிவி யோசிப்பதாக சொல்கிறார்கள். தனது மகள் திருமணத்திற்கு அழைக்க வந்திருப்பதாக கூறி பாஜக மூத்த நிர்வாகிகள் சிலரை சந்திக்கவும் டிடிவி திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

click me!