“யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம்”... திமுக அமைச்சரிடம் இருந்து உடன்பிறப்புகளுக்கு பறந்த கடிதம்...!

By Kanimozhi PannerselvamFirst Published May 14, 2021, 6:56 PM IST
Highlights

கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்காட்டி நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்தே அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கொரோனா தடுப்பு பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொள்காட்டி நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அதில், மதுரை மத்திய சட்டமன்ற தொகுதியிலிருந்து உங்களின் பேராதரவோடும், பெரும் உழைப்போடும், அன்னை மீனாட்சியின் அருளாசியோடும், வெற்றி பெற்ற நான், தமிழகத்தின் நிதி அமைச்சராக பொறுப்பு ஏற்றிருக்கிறேன். ஆயிரக்கணக்கான ஆருயிர் உடன்பிறப்புகளின் அயராத உழைப்பின் மூலம் கிடைத்த வெற்றியால் இது சாத்தியமானது.

எம்.எல்.ஏ.வாக மதுரையிலிருந்து புறப்பட்டு வந்த என்னை நிதி அமைச்சராக மீனாட்சி ஆளும் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறார் நமது நெஞ்சமெல்லாம் நிறைந்த தலைவர் மு.க.ஸ்டாலின். அமைச்சர் என்ற முறையில் என்னை சந்தித்து தங்களின் மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்த தாங்கள் ஒவ்வொருவரும் காத்திருப்பதை நான் நன்கறிவேன்.

வியர்வை சிந்தி உழைத்த உடன்பிறப்புகளை அய்யாவின் இல்லத்துக்கு அழைத்து அளவளாவ வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லாமல் இல்லை. ஏன் இன்னும் வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் உங்களை எல்லாம் அழைத்து விருந்தளித்து நானும் தங்களில் ஒருவனாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் கூட எனக்கு இருந்தது.

 ஆனால் நம் தமிழக முதல்வர் தலைவர் ஸ்டாலின் அவர்கள் என்னை ஊரடங்கு நடைமுறைப்படுத்துதல், கொரொனா நோய்த் தடுப்பு மற்றும் சிகிச்சைப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வை செய்யவும் நியமித்துள்ளதால் அது தொடர்பான பணிகளை முடுக்கிவிடும் பொருட்டு மாவட்டம் முழுக்க உள்ள மருத்துவமனைகள், சிகிச்சை மையங்கள், கண்காணிப்பு அலுவலகங்களுக்கு நேரடி ஆய்வுக்கு செல்ல உள்ளேன்.

கொரொனா நோய்ப்பரவலை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பணியினை மேற்கொள்ளும் பொறுப்பில் நான் உள்ளேன். உங்களை எல்லாம் ஒரு சேர சந்தித்து நானே ஒரு தவறான முன்னுதாரணமாகி விடக் கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். கொரோனா என்ற பெருந்தொற்று பேரலையாக எழுந்து வருவதால், சுகாதாரத்துறை விதித்துள்ள கட்டுப்பாடுகளை நாம் பின்பற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தலைவர் கூறியதை போல், உங்கள் ஒவ்வொருவரின் உடல்நலமே எனக்கு முக்கியம். ஆகையால் அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மதுரை வரும் எனக்கு வரவேற்பு கொடுப்பதை தவிர்க்குமாறு உங்களில் ஒருவன் என்ற முறையில் உரிமையோடும். 

அக்கறையோடும், பாசத்தோடும் கேட்டுக்கொள்கிறேன்.தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நமது அரசு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முன்னெடுத்துள்ள முழு ஊரடங்கை முறையாக நாம் அனைவரும் பின்பற்றி கொரோனா இல்லா தமிழகம் என்ற நிலையை உருவாக்குவோம். இதுவும் கடந்து போகும் என்பதற்கேற்ப எல்லாம் சில நாட்கள் தான். அதற்கு பிறகு இந்த அடியானை காண, கோரிக்கைகளை முன்வைக்க குறைகளை எடுத்துக் கூற எப்போது வேண்டுமானாலும் தாங்கள் வரலாம். ஆகையால் தற்போது முழு ஊரடங்கு முடியும் வரை கழக உடன்பிறப்புகள், ஆருயிர் தம்பிமார்கள், நிர்வாகிகள் என யாரும் என்னை சந்திப்பதற்காக வந்து தங்கள் உடல்நலத்தை வருத்திக் கொள்ளவேண்டாம் கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

click me!