தந்தை ராஜ்குமார் - மகன் புனித் ராஜ்குமார் மரணத்தில் இத்தனை ஒற்றுமைகளா..? கலங்க வைக்கும் விதிவசம்.!

By Asianet TamilFirst Published Oct 30, 2021, 1:46 PM IST
Highlights

நடிப்பில் மட்டுமல்ல, உடற்பயிற்சி, பின்னர் மரணம், கண்கள் தானம், உடல் வைக்கப்பட்ட இடம் என அனைத்துமே தந்தை-மகன் என இருவருக்குமே ஒன்றாகவே நடந்திருக்கிறது. 

கடந்த 2006-ஆம் ஆண்டில் இறந்த ராஜ்குமார் மரணத்திலும், நேற்று இறந்த அவருடைய மகன் புனித் ராஜ்குமார் மரணத்திலும் பல ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கியவர் ராஜ்குமார். கடந்த 2000-ஆம் ஆண்டில் சந்தன மரக் கடத்தல் வீரப்பனால் ராஜ்குமார் கடத்தப்பட்டு, 108 நாட்கள் கழித்து விடுவிக்கப்பட்டார். இந்த நிகழ்வுக்குப் பிறகு நடிப்பதையே நிறுத்திக்கொண்டார் ராஜ்குமார். 2000-ஆம் ஆண்டில் வெளியான ’சப்தவேதி’ என்ற திரைப்படம்தான் நாயகனாக அவருடைய கடைசி படமானது. ராஜ்குமார் கடந்த 2006-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதிதான் காலமானார். 

76 வயதிலும் உடல்நலம் எதுவும் குன்றாமல் நல்ல நிலையில் இருந்த ராஜ்குமார், தினந்தோறும் நடைப் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். அவர் காலமான அன்றைய தினமும் காலையில்  வழக்கமாக நடைப்பயிற்சியை மேற்கொண்டார். வீட்டிலேயே தினந்தோறும் மெடிக்கல் செக்கப் செய்துகொள்வதும் அவர் வழக்கம். அதை காலையில் முடித்துவிட்டு ஓய்வில் இருந்தார். மதியம் வீட்டில் உள்ள சோபாவில் உட்கார்ந்திருந்தபோது, ‘ஃபேன் வேகத்தைக் குறைக்கும்படி’ வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தபோதே சோபாவில் சரிந்து விழுந்தார் ராஜ்குமார்.

உடனே வீட்டுக்கு விரைந்த அவருடைய குடும்ப டாக்டர், அவரைப் பரிசோதித்துவிட்டு, தீவிர மாரடைப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தார். மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் எதுவும் நடக்கவில்லை. 15 நிமிடங்களுக்குள் அவருடைய மரணம் உறுதி செய்யப்பட்டது. மரணம் உறுதியானதை அடுத்து, ஏற்கனவே அளித்த உறுதிமொழிப்படி ராஜ்குமாரின் இரு கண்களும் தானமாக அளிக்கப்பட்டன. பின்னர் அவருடைய உடல் பெங்களூருவில் உள்ள காண்டீரவா மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கபட்டது. பின்னர் அவருடைய உடல் காண்டீரவா ஸ்டூடியோவில் அவருடைய உடல் புதைக்கப்பட்டது.

தந்தை ராஜ்குமாரைப் போலவே, புனித் ராஜ்குமாரும் நேற்று காலையில் வீட்டின் அருகில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு வந்தார். அங்கு அவர் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென சரிந்து விழுந்தார். உடனே அவரை நண்பர்கள் அருகில் உள்ள குடும்ப டாக்டரிடம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. உடனடியாக அவரை பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருடைய இதயத்தை செயல்பட சிகிச்சை அளித்தனர். அவரது இதயம் மீண்டும் செயல்படவில்லை. இதனையடுத்து காலை 11.40 மணியளவில் மரணம் அடைந்த தகவல் வெளியானது.

அதன் பிறகு அவருடைய தந்தை ராஜ்குமாரைப் போலவே புனித் ராஜ்குமார் கண்களும் தானமாக அளிக்கப்பட்டன. இதனையடுத்து, அவருடைய தந்தை ராஜ்குமார் உடல் வைக்கப்பட்ட காண்டீரவா மைதானத்திலேயே புனித் ராஜ்குமார் உடலும் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. ராஜ்குமார் புதைக்கப்பட்ட அதே காண்டீரவா ஸ்டூடியோவில்தான் புனித் ராஜ்குமார் இறுதிச் சடங்குகளும் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடிப்பில் மட்டுமல்ல, உடற்பயிற்சி, பின்னர் மரணம், கண்கள் தானம், உடல் வைக்கப்பட்ட இடம் என அனைத்துமே தந்தை-மகன் என இருவருக்குமே ஒன்றாகவே நடந்திருக்கிறது. என்ன சொல்வது? இதுதான் விதியா?
 

click me!