
விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் தற்கொலை வேதனையான விஷயம். இதை தடுப்பதற்கான வழிமுறையை தமிழக அரசு கண்டறிய வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த தீர்வு குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதை தொடாந்து இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்யவில்லை என குறிப்பிட்டு இருந்தது.
இந்நிலையில், சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ரூ.30 கோடியில் நிதியுதவிகளை வழங்கினார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
‘வறட்சியால் தற்கொலை செய்த 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு காரணங்களால் இறந்த நிலமுள்ள விவசாயிகள் 65 பேருக்கு மனிதாபிமான முறையில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
குத்தகை நிலத்தில் விவசாயம் செய்தவர்கள் என நிலமே இல்லாமல் இறந்தவர்களுக்கு நிதி தரமுடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகள் யாரும் வறட்சியால் இறக்கவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், வறட்சியால் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர் என்று முதல்வர் ஒப்பு கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.