ஸ்டாலின் கேட்ட அதே கேள்வியை குமுறலுடன் கேட்கும் விவசாயிகள்..! பதில் சொல்வாரா முதல்வர்?

Asianet News Tamil  
Published : Nov 05, 2017, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:23 AM IST
ஸ்டாலின் கேட்ட அதே கேள்வியை குமுறலுடன் கேட்கும் விவசாயிகள்..! பதில் சொல்வாரா முதல்வர்?

சுருக்கம்

farmers also asked the same question of stalin

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, நீர்நிலைகளை தூர்வாரவில்லை. மாறாக அரசு கஜானாவைத்தான் தூர் எடுத்து கொண்டிருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் விமர்சித்திருந்தார். தற்போது அதே விமர்சனத்தைத்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளும் முன்வைக்கின்றனர்.

கடந்த 6 நாட்களாக நாகை, திருவாரூர் ஆகிய கடலோர டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. குறிப்பாக நாகை மாவட்டம் தலைஞாயிறு, கீழ்வேளூர், தரங்கம்பாடி, நன்னிலம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பெய்த கனமழையால் சம்பா பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியத்தில் 15,000 ஏக்கர் விளைநிலத்தில் உள்ள பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறையை சுற்றியுள்ள 25,000 ஏக்கரில் நெற்பயிர்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதேபோல் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பல லட்சக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

கடந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவியதால் விவசாயிகள் விவரிக்க முடியாத அளவிற்கு பாதிப்படைந்தனர். இந்த ஆண்டாவது விளைந்துவிடும் என்ற நம்பிக்கையில், குறுகிய கால பயிரான சம்பா சாகுபடி செய்திருந்தனர்.

விதைத்த சில நாட்களில் மழை இல்லாமல், பணம் கொடுத்து தண்ணீர் இறைத்து பயிரை வளர்த்துவந்துள்ளனர். பயிர் வளர்ந்துவரும் சமயத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து, பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கிவிட்டன என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, மயிலாடுதுறை, கீழ்வேளூர், சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், நன்னிலம் என மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்கள் மூழ்கிவிட்டன. 

அதிகமான தண்ணீர் கடந்த 5 நாட்களாக தேங்கியுள்ளதால் வடிக்க சிரமப்படும் விவசாயிகள், தேங்கியுள்ள தண்ணீர் வடிய மேலும் 5 நாட்கள் ஆகும் என்பதால் கண்டிப்பாக பயிர்கள் அழுகிவிடும் என கண்ணீர் சிந்துகின்றனர்.

வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததே வயல்களுக்குள் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். முறையாக வடிகால் வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் தண்ணீர் ஓடியிருக்கும். அப்படி செய்யாததால்தான் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்துவிட்டது என விவசாயிகள் கதறுகின்றனர்.

கடந்த ஆண்டே வறட்சியால் நஷ்டம் அடைந்த விவசாயிகள், இந்த ஆண்டு கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக ஆய்வு செய்ய நாகை மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் குழுக்களை அமைத்துள்ளார். அந்த குழுக்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர்.

இனிமேல் பார்வையிட்டு மட்டும் என்ன பயன் என கேள்வி எழுப்பும் விவசாயிகள், பயிர்கள் மூழ்கியதற்குக் காரணம் வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததுதான் என திட்டவட்டமாக குற்றம்சாட்டுகின்றனர்.

பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள 400 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கியிருந்தார். ஆனால், குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால், பயிர்கள் தண்ணீரில் மூழ்கியே இருக்காது எனவும் 400 கோடி என்ன ஆனது? எனவும் விவசாயிகள் ஆதங்கத்துடன் கேள்வி எழுப்புகின்றனர்.

குடிமராமத்து பணிக்காக ஒதுக்கிய நிதி தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கேள்வி எழுப்பியிருந்தார். 

தமிழக அரசு நீர்நிலைகளை தூர்வாரவில்லை. மாறாக அரசு கஜானாவைத்தான் தூர்வாரி கொண்டிருக்கிறது என விமர்சித்த ஸ்டாலின், குடிமராமத்து பணிக்காக ஒதுக்கிய 400 கோடி ரூபாய் தொடர்பாக முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? என ஸ்டாலின் கேள்வி எழுப்பியிருந்தார்.

தற்போது, விவசாயிகளும் அதே குற்றச்சாட்டைத்தான் முன்வைக்கின்றனர். வடிகால் வாய்க்கால்களை தூர்வாரியிருந்தால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியிருக்காது என குமுறுகின்றனர் விவசாயிகள். கடந்த ஆண்டு கருகியது. இந்த ஆண்டு மூழ்கியது. எப்படி பார்த்தாலும் எல்லா வகையிலும் நஷ்டம் என்னவோ விவசாயிகளுக்குத்தான்.

நாகை மற்றும் திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களிலேயே வடிகால் வாய்க்கால்கள் தூர்வாரப்படவில்லை என்றால், வேறு எங்கு தூர்வாரப்பட்டிருக்க போகிறது? அப்படியென்றால் அந்த 400 கோடி என்ன ஆனது? என்ற கேள்வி நியாயமானதுதானே..

400 கோடி ரூபாய் தொடர்பாக ஸ்டாலின் கேட்ட அதே கேள்வியைத்தான் பயிர்கள் அழுக இருக்கும் நிலையில், விவசாயிகளும் குமுறலுடன் கேட்கின்றனர்.

பதில் சொல்வாரா முதல்வர்? வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா?
 

PREV
click me!

Recommended Stories

மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!
ஆர்எஸ்எஸ் அமைப்பை பார்த்து கத்துக்கோங்க ராகுல் காந்தி.. காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் ட்வீட்!