
‘‘விலைவாசியை கட்டுப்படுத்துங்கள் அல்லது பதவியை விட்டு ஓடுங்கள்’’ என்று மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராகுல் விமர்சனம்
நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் 6.3 –ல் இருந்து கடந்த காலாண்டில் 5.7 –ஆக குறைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சிவீதம் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிக்கு எதிராக பிரதமர் மோடியையும், மத்திய பா.ஜனதா அரசையும் தனது டுவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சனம் செய்துவருகிறார்.
பதவியை விட்டு ஓடுங்கள்
இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்டுள்ள புதிய டுவிட்டர் பதிவில் வெற்றுப் பேச்சுக்களை நிறுத்திக்கொள்ளுமாறும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாவிட்டால் பதவியை விட்டு ஓடுங்கள் என்றும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிலிண்டர் விலை உயர்வு
இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல்கள் நெருங்கியுள்ள நிலையில் ராகுல் காந்தி இவ்வாறு டுவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் சிலிண்டர் எரிவாயு சிலிண்டர்களின் விலை ரூ. 4. 50 உயர்த்தப்பட்டது. மேலும் மானியமில்லாத எரிவாயு சிலிண்டர் விலை ஒரேயடியாக ரூ. 93 உயர்த்தப்பட்டது.
பதிலடி
அதேபோல மத்திய அரசு மானியத்தைக் குறைத்துள்ளதை அடுத்து, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ரேசன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இமாச்சல பிரச்சார தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கரையான்கள் என கடுமையாக விமர்சித்து பேசியுள்ள நிலையில், பிரதமர் மோடியை பதவியை விட்டு இறங்குமாறு ராகுல் காந்தி பதிலடி கொடுத்து இருக்கிறார்.