காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு .. கொந்தளித்த எடப்பாடி பழனிச்சாமி.

By Ezhilarasan BabuFirst Published Jul 28, 2021, 11:07 AM IST
Highlights

பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறினார் அதையும் நிறைவேற்றவில்லை, வங்கிகளில் வாங்கிய நகைக் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என அறிவித்தார், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, 

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் சேலத்தில் தொண்டர்களுடன் தனது இல்லத்தின் முன்பு எடப்பாடி பழன்ச்சாமி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியவாது. 

எனது வீட்டுக்கு முன் இந்த ஆர்ப்பாட்டத்தில் நான் கலந்து கொண்டுள்ளேன்.  திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக சுமார் 505 அறிவிப்புகள், அதாவது தேர்தல் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் சில முக்கியமான அறிவிப்புகளை கூட அவர்கள் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் நேரத்தில் தவறான பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களிடம் வாக்கு பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறது திமுக. எனவே தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம், அதற்காகத்தான் இந்த ஆர்பாட்டம் நடைபெறுகிறது. 

முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்தார். தேர்தல் முடிந்தவுடன் அது ரத்து செய்யப்படும் என்றார், ஆனால் தேர்தல் முடிந்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வை ரத்து செய்வதுதான் என கூறினார், அது இப்போது என்ன ஆனது. பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என கூறினார் அதையும் நிறைவேற்றவில்லை, வங்கிகளில் வாங்கிய நகைக் கடனை தள்ளுபடி செய்வதாக கூறினார் அது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை, மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என அறிவித்தார், அது நடைமுறைப்படுத்தப்படவில்லை, ஆனால் நேர்மாறாக பலவிதத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மீட்டரில் வருகிற கட்டணத்தைதான் வசூல் செய்யவேண்டும், ஆனால் தோராயமாக வசூல் செய்யப்படும் என கூறுகிறார்கள் அது எப்படி தோராயமாக வசூல் செய்ய முடியும்.  ஆகவே இது அனைத்திலும் மோசடி நடக்கிறது.  

அதிமுக ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக பார்த்துக்கொண்டோம். 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவித்து அதை நடைமுறைப்படுத்தினோம். ஆனால் இப்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால், தற்போது மக்களை திசைதிருப்பும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்கு போடும் முயற்சியில் திமுக ஈடுபட்டுள்ளது. வேண்டுமென்றே திட்டமிட்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக முன்னாள் அமைச்சர்  மீது பொய் வழக்கு போடுகிறது. அதிமுக அரசு ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மக்களுக்கு நன்மை செய்யும். மக்கள் பிரச்சனைகளுக்காக பிரதமரை சந்தித்து  கோரிக்கை வைத்துள்ளோம்.  மக்கள் பிரச்சனைகளுக்காக அதிமுக முன்னணியில் நிற்கும் என்றார்


 

click me!