பொய் வழக்கு போடுவதா..? இதோடு உங்க அடாவடியை நிறுத்தி கொள்ளுங்கள்.. எடப்பாடி எச்சரிக்கை..

By Thanalakshmi VFirst Published May 28, 2022, 5:50 PM IST
Highlights

ஜனநாயக முறையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல்‌ தடுத்தால்‌, அதற்கான விலையை விரைவில்‌ தர நேரிடும்‌ என்று இந்த ஆட்சியாளர்களை எச்சரிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” உள்ளாட்சி அமைப்புகளில்‌ சட்டப்பூர்வமாக, நேர்மையாக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள்‌ பணியாற்றி வரும்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழக நிர்வாகிகளையும்‌, உறுப்பினர்களையும்‌ செயல்படவிடாமல்‌ தனது ஆக்டோபஸ்‌ கரங்களால்‌ நசுக்கும்‌ வேலையை ஒருசில அதிகாரிகளின்‌ துணையுடன்‌ மு.க. ஸ்டாலின்‌ தலைமையிலான இந்த விடியா அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆட்சியில்‌, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தைச்‌ சார்ந்தவர்கள்‌ எந்தெந்த அமைப்புகளில்‌ அதிகமாக வெற்றி பெற்றுள்ளார்களோ, அங்கெல்லாம்‌ அவர்களை நகர மன்றத்‌ தலைவர்களாகவும்‌, துணைத்‌ தலைவர்களாகவும்‌ தேர்ந்தெடுக்க முடியாதபடி, ஆட்சி அதிகாரத்தைப்‌ பயன்படுத்தி இடையூறு செய்தார்கள்‌. குறிப்பாக, கோவை மாவட்டத்தில்‌ வெள்ளலூர்‌, சேலம்‌ மாவட்டத்தில்‌ வனவாசி போன்ற பல இடங்களில்‌ ஆளும்‌  கட்சியினரின்‌ அராஜகத்தை முறியடிக்க உயர்நீதிமன்றத்தின்‌ படிக்கட்டுகளில்‌ ஏறி ஜனநாயகத்தை நிலைநாட்டியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌. அப்படி நிர்மாணிக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளையும்‌, சீர்குலைக்கும்‌ முயற்சியில்‌ தொடர்ந்து இந்த அரசு ஈடுபட்டு வருவது மக்களிடையே கடும்‌ அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. 

மேலும் படிக்க: அரசியல்‌ நாகரீகம்‌ பற்றி உங்க தலைவருக்கு முதலில் பாடம் எடுங்க.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தடாலடி..

சமீபத்தில்‌ கூட, 22.2.2022-ஆம்‌ தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித்‌ தேர்தலில்‌, மணப்பாறை நகராட்சியில்‌ மொத்தம்‌ உள்ள 27 நகர மன்ற வார்டு உறுப்பினர்களில்‌, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போட்டியிட்ட 11 கழக வேட்பாளர்கள்‌ வெற்றி பெற்றுள்ளனர்‌. தொடர்ந்து, திமுக - 8, கம்யூனிஸ்ட்‌ - 2, காங்கிரஸ்‌ - 1, சுயேட்சை - 5 என மற்ற கட்சிகளைச்‌ சேர்ந்தவர்கள்‌ வெற்றி பெற்றுள்ளனர்‌.4,3.2022 அன்று நடைபெற்ற நகர மன்றத்‌ தலைவர்‌ தேர்தலில்‌, கழக வேட்பாளர்‌ சுதா பாஸ்கரன்‌ அவர்கள்‌ 15 வாக்குகளைப்‌ பெற்று வெற்றி பெற்றுள்ளார்‌. 90 நாட்களுக்குள்‌ நகர மன்றம்‌ கூட்டப்பட வேண்டும்‌ என்பது விதி. இதை பொறுக்க முடியாத ஆளும்‌ கட்சியினர்‌, இந்த நகர மன்றத்தையே கலைக்கும்‌ முயற்சியில்‌
ஈடுபட்டு வருகின்றார்கள்‌.

மணப்பாறை நகர மன்றம்‌ கூட்டப்படாமல்‌ காலதாமதம்‌ செய்ததைத்‌ தொடர்ந்து, கழகத்தின்‌ சார்பில்‌ வெற்றி பெற்ற உறுப்பினர்கள்‌ நகர மன்றக்‌ கூட்டத்தை உடனடியாகக்‌ கூட்ட ஆணையிடுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை
அணுகினர்‌. அதைத்‌ தொடர்ந்து 20.4.2022 அன்று நகர மன்றக்‌ கூட்டத்தை 4 வாரங்களுக்குள்‌ கூட்டுமாறு நீதிமன்றம்‌ உத்தரவிட்டது. இதன்படி 20.5.2022-க்குள்‌ நகர மன்ற ஆணையாளரால்‌ கூட்டம்‌ கூட்டப்பட வேண்டும்‌. ஆனால்‌, (வேண்டுமென்றே குழப்பத்தை விளைவிக்க 5 நாட்கள்‌ தாமதமாக) 25.5.2022 அன்று நகர மன்றக்‌ கூட்டம்‌ நடைபெறுவதாக இந்த விடியா அரசின்‌ அதிகாரிகள்‌ கூறியுள்ளனர். எனவே நகர மன்றக்‌ கூட்டத்தை சுமூகமாக நடத்த வேண்டியும்‌, கழக ஆதரவு பெற்ற நகர மன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியும்‌, திருச்சி சரக காவல்‌ துறைத்‌ தலைவர்‌ பாலகிருஷ்ணன்‌ நகர மன்றத்‌ தலைவர்‌ சுதா தலைமையில்‌ நகர மன்ற உறுப்பினர்கள்‌ நேரில்‌ மனு அளித்தனர்‌.

24.5.2022 அன்று கழகத்தைச்‌ சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள்‌ ஒரு தனியார்‌ இடத்தில்‌ ஆலோசனையில்‌ ஈடுபட்ட நேரத்தில்‌, திமுக-வினரின்‌ தூண்டுதல்பேரில்‌, முன்னாள்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ ஆர்‌. சந்திரசேகர்‌, மணப்பாறை நகரக்‌ கழகச்‌செயலாளர்‌ பவுன்‌ ராமமூர்த்தி உட்பட 10 கழக நிர்வாகிகளுக்கு எதிராக, மணப்பாறை காவல்‌ நிலையத்தில்‌‌, வன்கொடுமை பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகளின்‌ கீழ்‌ பொய்‌ வழக்கு பதிவு செய்து, 25.5.2022 அன்று நடக்க இருந்த நகர மன்றக்‌ கூட்டத்தில்‌ கழகக்‌ கவுன்சிலர்கள்‌ கலந்துகொள்ள இயலாத வண்ணம்‌ தனிப்படை அமைத்து, இவர்களைக்‌ கைது செய்ய இந்த விடியா
அரசின்‌ காவல்‌ துறை தீவிரம்‌ காட்டியது.

மேலும் படிக்க: தலைவரான அன்புமணி.. மகனை கட்டித் தழுவி கண்ணீர் விட்ட ராமதாஸ்.. நெகிழ்ந்த பாட்டாளிகள்.

25.5.2022 அன்று கழகத்தைச்‌ சேர்ந்த நகர மன்ற உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில்‌ நேரில்‌ ஆஜராகி, நடந்த நிகழ்வுகளை நீதியரசர்கள்‌ முன்‌ எடுத்து வைத்ததின்‌ அடிப்படையில்‌, உயர்நீதிமன்றம்‌ வழக்கு
சம்பந்தமாக சில உத்தரவுகளை பிறப்பித்தது. 25.5.2022 அன்று நகர மன்றக்‌ கூட்டம்‌ நடைபெறவில்லை என்று நகராட்சி
நிர்வாகம்‌ முடிவு செய்து, நகர மன்றத்‌ தலைவருக்கு பதிலாக சிறப்பு அலுவலரை நியமிக்க முடிவு செய்துள்ளதாகத்‌ தெரிய வருகிறது.நீங்கள்‌ உள்ளாட்சியில்‌ நல்லாட்சி தருகிறீர்களோ, இல்லையோ, ஜனநாயக முறையில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினரை செயல்பட விடாமல்‌ தடுத்தால்‌, அதற்கான விலையை விரைவில்‌ தர நேரிடும்‌ என்று இந்த ஆட்சியாளர்களை எச்சரிக்கிறேன்‌. மணப்பாறை நகராட்சி விவகாரத்தில்‌ இனியும்‌ அடாவடி  செயல்களில்‌ ஆளும்‌ கட்சியினரும்‌, அதிகாரிகளும்‌ ஈடுபட்டால்‌, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும்‌ என்று எச்சரிக்கிறேன்‌.

மேலும்‌, உள்ளாட்சி அமைப்புகளை சீர்குலைக்கும்‌ இந்த அரசின்‌ தாந்தோன்றித்தனமான போக்கைக்‌ கண்டித்தும்‌, மக்கள்‌ பணியாற்றும்‌ கழக நிர்வாகிகள்‌ மீது வன்கொடுமை தடுப்பு சட்டப்‌ பிரிவுகளின்‌ கீழ்‌ தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்‌ பெற வலியுறுத்தியும்‌, மக்கள்‌ ஆதரவோடு ஜனநாயக முறையில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ சார்பில்‌ போராட்டம்‌ நடத்தப்படும்‌ என்றும்‌ எச்சரிக்கிறேன்‌ என்று  சட்டமன்ற எதிர்க்கட்சித்‌ தலைவர்‌ எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: திமுகவின் இரட்டை வேடம்.. ஈழத்தமிழர்கள் மீது உண்மையில் அக்கறை இருக்கா..? போட்டு பொளக்கும் சீமான்..

click me!