அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல்.. தலைவர் பதவிக்கு மோதல்.. ஆர்பாட்ட அறிவிப்பை அடித்து உடைத்த தயாநிதி மாறன்.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 5:49 PM IST
Highlights

அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் உள்ளது. அக்காட்சியில் யார் தலைவர் என்ற போட்டி இருப்பதால், முல்லைப்பெரியாறு சம்பந்தமாக இல்லாத பிரச்சினையை அதிமுக உருவாக்கி வருகிறது. 

அதிமுகவில் உச்சகட்ட உட்கட்சி பூசல் இருந்து வருவதால் அதை மறைப்பதற்காக முல்லைப் பெரியாறு விவகாரத்தில் இல்லாத பிரச்சினையை அதிமுக உருவாக்குகிறது என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் குற்றம்சாட்டியுள்ளார். மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட 5 மாநில விவசாயிகளை திரட்டி முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ள நிலையில், தயாநிதி மாறன் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.திமுக ஆட்சி பொறுப்பேற்றது முதல் அக்காட்சியின் மீது பாஜக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அதிமுக எதிர்க்கட்சியாக இருந்து வந்தாலும்,  தாங்களே எதிர்க்கட்சி என்ற ஒரு பிம்பத்தை கட்டமைக்கும் முயற்சியில் தொடர்ந்து பாஜக ஈடுபட்டு வருகிறது,

ஏனெனில் அரசுக்கு எதிராக இதுவரை அதிமுக  பெரிய அளவிலான குற்றச்சாட்டுகளையோ, போராட்டங்களையோ நடத்தவில்லை என்பதுதான் அதற்கு காரணம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 6 மாதங்கள் கடந்த நிலையில் திமுகவுக்கு போதிய அவகாசம் வழங்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓபிஎஸ் இபிஎஸ் ஆகியோர் கூறி வந்தனர். இந்நிலையில் முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக அரசு கேரளா அரசுக்கு அடிபணிந்து விட்டது, முல்லைப்பெரியாறு  அணையில் தமிழகத்திற்குள்ள உரிமையை திமுக அரசு விட்டுக் கொடுத்து விட்டது என்றும், அரசுக்கு எதிராக பகீர் குற்றச்சாட்டை அதிமுக முன்வைத்துள்ளது. குறிப்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இந்த விவகாரத்தில் அறிக்கை மேல் அறிக்கை விடுத்து திமுகவை கண்டித்து வருகிறார். 

இதையும் படியுங்கள்: நரகாசூரனை அழித்த தினம்.. எடப்பாடிக்கு சவால்..?? பொது செயலாளர் என குறிப்பிட்டு சசிகலா வெளியிட்ட வாழ்த்து செய்தி

அதாவது தென் தமிழ்நாட்டு மக்களின் ஜீவாதார பிரச்சினையாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்துக்கான உரிமையை பெற்றுத் தந்தார், அணை வலுப்படுத்தப்பட பிறகு 152 அடியாக உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றம் ஆணையிட்டது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட போராட்டம் நடத்தி தமிழகத்திற்கான உரிமையை நிலைநாட்டிய நிலையில் வழக்கம்போல கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணை சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது, அதிக தண்ணீரை தேக்கி வைத்தால் அழுத்தம் தாங்காமல் அணை பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது, 50 லட்சம் மக்கள் அச்சத்தில் உள்ளனர் என்று தேவையில்லாத வதந்திகளையும் பரப்பி வருகிறது.

அணையின் நீர்மட்டம் 152 அடியை எட்டினால் மட்டுமே கடைமடை பகுதிகளான சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு பாசனத்திற்கு, குடிதண்ணீர் தேவைகளுக்கு தண்ணீர் உறுதிசெய்யப்படும். ஆனால் தற்போது முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 142 அடியை நெருங்கும் நேரத்திலேயே கேரளா அமைச்சர்கள் அதிகாரிகளை சாட்சிக்கு வைத்துக்கொண்டு தமிழ்நாடு அரசு நீரை வெளியேற்ற உடன்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை தமிழ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையிலும், அணையின் நீர் இருப்பு கண்காணிப்பது போல கேரள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை சாட்சிக்கு அழைத்து அவர்களது மேற்பார்வையில் அணையில் கதவுகளை தமிழக அதிகாரிகள் திறந்திருப்பது தமிழகத்தின் உரிமையை கேள்விக்குறியாக்கும் செயல் என கூறி தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனையும், தமிழக அரசையும் ஓ.பன்னீர்செல்வம் கண்டித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: யோகியை எதிர்த்து பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும்.. சல்மான் குர்ஷித் பயங்கர ஐடியா.

மேலும் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் பாசன  தேவையையும், குடிநீர் தேவையையும் கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டுவரும் திமுக அரசின் செயல்பாடுகளை மாநில மக்களின் உரிமைக்காக போராடுவதில், திமுக அரசு காட்டும் ஏனோதான நடவடிக்கைகளையும் கண்டித்து அதிமுக சார்பில் வருகிற 9-11- 2021 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவிப்பு செய்துள்ளது. 

அதிமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியையும், மக்கள் மத்தியில் உண்மையை விளக்க வேண்டிய அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிமுகவின் இந்த போராட்ட அறிவிப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார். துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1500 குடும்ப மற்றும் பொதுமக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி பிராட்வே பகுதியில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் பங்கேற்று தொகுதி மக்களுக்கு தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கினர். அப்போது 30 நரிக்குறவர்களும் தீபாவளி பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது பரிசு வழங்கிய சேகர்பாபு மற்றும் தயாநிதி மாறனுக்கு நரிக்குறவர் மக்கள் பாசி மாலை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், அதிமுகவில் உட்கட்சிப் பிரச்சினை உச்சக்கட்டத்தில் உள்ளது. அக்காட்சியில் யார் தலைவர் என்ற போட்டி இருப்பதால், முல்லைப்பெரியாறு சம்பந்தமாக இல்லாத பிரச்சினையை அதிமுக உருவாக்கி வருகிறது. ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் இதுதொடர்பாக தெளிவாக விளக்கம் தெரிவித்தும், உட்கட்சி பிரச்சினையை திசை திருப்புவதற்காக அதிமுக இந்த போராட்டத்தை அறிவித்து உள்ளது என்றார். 
 

click me!