யோகியை எதிர்த்து பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும்.. சல்மான் குர்ஷித் பயங்கர ஐடியா.

By Ezhilarasan BabuFirst Published Nov 2, 2021, 3:43 PM IST
Highlights

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் காய்ச்சல் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுதான் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார் என கூறினார் அவருக்காக நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். 

எதிர்வரும் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில முதல்வர் வேட்பாளராக பிரியங்க காந்தி களமிறங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார். அடுத்தாண்டு உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்ரகாண்ட் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் 2022ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே நடைபெற உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுவருகிறது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் இப்போதிலிருந்தே தங்களது தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் தேர்தல் வியூகங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த 5 மாநிலங்களிலும் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. யோகி ஆதித்யநாத்தின் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. மொத்தம்  403 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்திரபிரதேச மாநிலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு 325 இடங்களை பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கைப்பற்றி ஆட்சியை பிடித்தன. எனவே இந்த முறை உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என முழு மூச்சாக களமிறங்கியுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பெண்களைக் குறி வைத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு மூன்று இலவச சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும், பேருந்தில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர், மாணவிகளுக்கு ஸ்கூட்டி மற்றும் ஸ்மார்ட்போன் வழங்கப்படும், ஆஷா பணியாளர்களுக்கு பத்தாயிரம் ஊதியம் வழங்கப்படும், விதவைகளுக்கு ஆயிரம் வழங்கப்படும் என பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். 

அதேபோல் தலா ஐந்து அரசுப்பணிகளில் இரண்டு அரசுப் பணிகள் பெண்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ள அவர், எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் பெண்கள் தேர்தலில் போட்டியிட 40 சதவீதம் அளவிற்கு இடம் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ் என முக்கிய கட்சிகள் தயாராகி வரும் நிலையில்  பிரியங்கா காந்தியின் அதிரடி நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநில பெண்களின் ஆதரவு பன்மடங்கு பெருகி வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பதவியில் இருந்து அகற்ற சதித் திட்டம் தீட்டி அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பிய முன்னாள் இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய் அவர்கள் நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடும் காய்ச்சல் காரணமாக தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றுதான் அவர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி இருக்கிறார் என கூறினார் அவருக்காக நாம் தொடர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். எதிர்வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் 40 சதவீதம் அளவிற்கு பெண்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படும் என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார், பிரியங்கா தலைமையில் அதிக பெண்கள் தேர்தலில் போட்டியிடுவார் என்றார், பஞ்சாப் மாநில தேர்தலில் கேப்டன் அம்ரிந்தர் சிங் தனிக் கட்சி ஆரம்பித்தால் அது பாஜகவுக்கு தான் பாதிப்பை ஏற்படுத்துமே தவிற காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றார், கேப்டன் அமெரிக்கா சிங் நல்ல மனிதர் என்றும், தற்போது அவர் காங்கிரஸ் கட்சியின் மீது மனவருத்தத்தில் இருப்பதால் கட்சிக்குள் பஞ்சாப் மாநிலத்தில் சிறு பிரச்சனை நிலவுகிறது என்றார்.

நாளுக்கு நாள் இந்தியாவின் சட்டம்-ஒழுங்கு மோசமடைந்து வருவதாக தெரிவித்த சல்மான் குர்ஷித் அதை மக்கள் கண்கூடாக பார்த்து வருகின்றனர் என்றார். தேசத்தின் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்த அவர், இந்திய பிரதமர் மோடி வாடிகனில் போப்பை சந்தித்தது மிகவும் நல்லது என்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இப்போது நல்லவர்களை சந்திக்கிறார், அதை நான் நல்லதாகவே பார்க்கிறேன் என்று கூறிய அவர், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தரப்பிரதேச மாநில சட்டமன்ற தேர்தலில் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக களமிறங்க வேண்டும் என்று தான் எண்ணுவதாகவும் ஆனால் அது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
 

click me!