தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு வேண்டும்… அமித்ஷாவை சந்தித்தது அனைத்து கட்சி குழு!!

By Narendran SFirst Published Jan 17, 2022, 6:50 PM IST
Highlights

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி எனக்கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் சந்தித்து பேசினர். 

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி எனக்கூறி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் தமிழக அனைத்து கட்சி எம்.பி.,க்கள் சந்தித்து பேசினர். நீட் நுழைவுத் தேர்வால் தமிழகத்தில் கிராமப்புற, ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு எட்டாக் கனியாக இருந்து வருகிறது. அரியலூர் அனிதா தொடங்கி 15 மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல் தற்கொலை செய்துக்கொண்டு உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். இதனால் நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மத்திய அரசு விலக்கு தர வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழக கட்சிகளின் வேண்டுகோளாக இருந்து வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போதும் நீட் தேர்வு விவகாரம் முக்கியமான பேசுபொருளாக இருந்தது. தற்போதைய திமுக ஆட்சி தொடக்கம் முதலே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். பாஜக தவிர்த்து அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிலும் சென்று வலியுறுத்தினார். இந்த நிலையில் கடந்த மாதம் இறுதியில் தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகையில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரும் மனுவை அளித்தனர். மேலும் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் குடியரசு தலைவரிடம் தமிழக எம்.பி.க்கள் குழு வலியுறுத்தியது. கொரோனா பரவல் காரணமாக குடியரசு தலைவர் மாளிகையில் இம்மனு கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக எம்.பி.க்கள் குழு முயற்சித்தது. தமிழக எம்.பி.க்கள் குழுவுக்கு முதலில் நேரம் ஒதுக்கிய அமித்ஷா பின்னர் அதை ரத்து செய்தார்.

இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சக அலுவலகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் மனுவை தமிழக எம்.பி.க்கள் குழு கொடுத்தனர். அனுமதி கிடைக்காததற்கு எதிர்ப்பு கிளம்பியது. அதை தொடர்ந்து ஜனவரி 17 ஆம் தேதி அனைத்து கட்சி குழுவை அமித்ஷா சந்திக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் இன்று அனைத்து கட்சி குழுவை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்தித்தார். டெல்லி சென்ற அனைத்து கட்சி குழுவினர் மாலையில் அமித்ஷாவை சந்தித்து பேசினர். அப்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியதுடன் இது தொடர்பாக மனுவையும் அளித்தனர். இதன் பின்னர் திமுக எம்.பி டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து உடனடியாக விலக்கு அளிக்க வலியுறுத்தி மனு அளித்தோம். மத்திய சுகாதாரத்துறை மற்றும் கல்வித்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தப்படும் என அமித்ஷா தெரிவித்தார் என்று கூறினார்.

click me!