நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு.. மத்திய அமைச்சரிடம் வலியுறுத்துவேன்.. டெல்லியில் மா.சு

By Ezhilarasan BabuFirst Published Jul 15, 2021, 10:47 AM IST
Highlights

மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தேவையான சுகாதார துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க உள்ளோம்

தமிழ்நாட்டிற்கு அதிக தடுப்பூசி ஒதுக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பதன் அவசியம் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவிடம் வலியுறுத்தவுள்ளதாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார். அரசு முறை பயணமாக டெல்லி செல்லும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஒன்றிய சுகாதார துறை அமைச்சரை இன்று மதியம் 2.30 மணிக்கு சந்திக்க உள்ளார். இதற்காக நேற்று மாலை சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி செல்லும் முன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் பேசியதாவது, மத்திய அரசின் சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு தேவையான சுகாதார துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் மக்கள் தொகைக்கு ஏற்ப தடுப்பூசிகளை கூடுதலாக வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைக்க உள்ளோம். தமிழ்நாட்டுக்கு ஒரு கோடி தடுப்பூசிகளை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று முதல்வர் பிரதமருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக துறையின் அமைச்சரிடம் எடுத்துக் கூறவுள்ளோம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டமைப்பு பணிகளை உடனடியாக துவங்கிட வேண்டும் என்றும் கோவையில் புதிதாக எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கையையும் வைக்க உள்ளோம்.

மேலும் தமிழ்நாட்டில் உள்ள 11 மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆய்வுகளை மேற்கொண்டு உடனடியாக அதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் முன்வைக்க உள்ளோம். தடுப்பூசி தட்டுப்பாட்டை போக்கும் வகையில் செங்கல்பட்டு மற்றும் குண்னூரில் உள்ள தடுப்பூசி மையங்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று வேண்டுகோளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வைக்க உள்ளோம். நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட  13 கோரிக்கைகளை மனுவாக எடுத்துச் செல்கிறோம்.  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவசியத்தை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் வலியுறுத்த உள்ளோம். நீட் தேர்வுக்கான அறிக்கை தொடர்பாக முதல்வர் சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அதற்கான நடவடிக்கைகளை எடுப்பார்
.
 

click me!