தொகுதி விட்டு தொகுதி மாறி... ராமநாதபுரத்தில் பவர் காட்டத்துடிக்கும் பாஜக நிர்வாகி..!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2019, 6:06 PM IST
Highlights

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்து விலகி விட்டு பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.
 

ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அதிமுகவிலிருந்து விலகி விட்டு பாஜகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் ராமநாதபுரம் தொகுதியை கைப்பற்ற வேண்டும் என்பதில் குறியாய் இருக்கிறார்.

தமிழக பாஜக துணை தலைவராக இருக்கும் அவர் அதிமுக கூட்டணியில் எப்படியும் நெல்லை தொகுதியை பெற்று விட வேண்டும் என காய் நகர்த்தி வந்தார். இதற்காக பாஜக தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். ஜாதி, மற்றும் பணபலத்தால் வென்றுவிடலாம் என திட்டமிட்டு வந்தார். தூத்துக்குடியை பாஜகவுக்கு ஒதுக்கி விட்டு அதிமுக நெல்லையை வைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளது. 

ராமநாதபுரம் தொகுதியில் உள்ளூர் அதிமுகவினரின் கோஷ்டி மோதலால் அந்தத் தொகுதியை பாஜவுக்கு அதிமுக ஒதுக்கி விட்டது. நெல்லை கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. ராமநாதபுரம் தொகுதியையாவது கைப்பற்றி விடலாம் என திட்டமிட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். ராமநாதபுரம் தொகுதியில் அவர் சார்ந்த முக்குலத்தோர் சமுதாய வாக்குகளும் அதிகமாக உள்ளது. ஏற்கெனவே அதிமுகவில் இருந்ததாலும் காசை செலவழித்து எம்பியாகி விடலாம் என முயற்சி செய்து வருகிறார். 

அதற்காக தேர்தல் செலவை நான் பார்த்துக் கொள்கிறேன். எப்படியாவது தொகுதியை கொடுங்கள் என அழுத்தம் கொடுத்து வருகிறார் நயினார் நாகேந்திரன். உள்ளூர் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவும் இருப்பதால் இவருக்கு ராமநாதபுரம் தொகுதி உறுதி எனக் கூறப்படுகிறது. அதேபோல் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாஜக மாநில துணை தலைவரான குப்புராம், கருப்பு போன்றவர்களும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக சீட் கேட்கத் தொடங்கி அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

click me!