பெண் சிங்கம் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ்கார்டன் குகை எப்படி இருக்கிறது?

By sathish k  |  First Published Sep 18, 2018, 5:40 PM IST

வேதா நிலையம் 81, போயஸ் கார்டன், சென்னை-18 (டோர் நம்பர்ம், பின் கோட் இரண்டிலுள்ள டிஜிட்டுகளையும் தனியே கூட்டிப்பார்த்தால் ‘9’ என்று அம்மாவின் ராசி எண் வருவதுதான் ஹைலைட்டு) என்பது பெண் சிங்கமான ஜெயலலிதா வாழ்ந்த ஹைடெக் குகையாயிற்றே இது. 


கடந்த சில காலமாக அ.தி.மு.க.வின் மனசாட்சியாகவே மாறியிருக்கிறார் மைத்ரேயன். பிரிந்து நின்று பன்னீர் பிரச்னை செய்தபோது மிக பக்குவமாக செயல்பட்டு இணைப்புக்கு வழி செய்தார், அணிகள் இணைத்து விட்ட பிறகும் மனங்கள் இணையாமல் உரசிக்கொண்டே திரிந்ததை சோஷியல் மீடியாவில் வெளிப்படையாக போட்டுடைத்தார், இந்திய ராணுவ அமைச்சர் பன்னீரை புறக்கணித்துவிட்டு இவருக்கு சந்திப்பு அனுமதி கொடுக்குமளவுக்கு நல்ல பெயர் பெற்று வைத்திருக்கிறார் கட்சிக்காக. 

அப்பேர்பட்ட மைத்ரேயன் எம்.பி. மனம் உடைந்து ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார் சமீபத்தில் “கடந்த 19 ஆண்டுகளில் போயஸ்கார்டன் வழியே எத்தனை முறை போயிருப்பேன்! அம்மாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவன் என்பதால் அம்மா வாழ்ந்த வேதா நிலையத்திற்கு நேரம் காலம் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லும் வாய்ப்பு இருந்தது. அந்த வீடு நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து இருந்தது. ஆனால் 2017 ஜனவரிக்குப் பின் நமது அம்மாவின் போயஸ்கார்டன் வீடே நமக்கு அந்நியமாகிவிட்டது. 

Tap to resize

Latest Videos

நேற்று மாலை அந்த வழியாகச் செல்லும்போது நாம் கோயிலாக வணங்கும் அம்மாவின் போயஸ் தோட்ட இல்லம் இருக்கும் திசை நோக்கி கும்பிட்டபடியே சென்றபோது என் கண்களில் நீர்” .இதை வாசித்தபிறகுதான் அ.தி.மு.க.வின் பல வி.வி.ஐ.பி.க்களுக்கு ‘வேதா இல்லம்’ மறுபடியும் நினைவுக்கு வந்தது. என்ன சாதா இல்லமா, வேதா இல்லம்? தேசிய அரசியலின் தலையெழுத்தை பல முறை திருத்தி எழுதிய மையமாயிற்றே அது. ஆனானப்பட்ட மோடியே தேடி வந்து நின்ற இடம் அது. 

வேதா நிலையம் 81, போயஸ் கார்டன், சென்னை-18 (டோர் நம்பர்ம், பின் கோட் இரண்டிலுள்ள டிஜிட்டுகளையும் தனியே கூட்டிப்பார்த்தால் ‘9’ என்று அம்மாவின் ராசி எண் வருவதுதான் ஹைலைட்டு) என்பது பெண் சிங்கமான ஜெயலலிதா வாழ்ந்த ஹைடெக் குகையாயிற்றே இது. 

இன்று ஒரு அகல் விளக்கு ஏற்ற கூட ஆளில்லாமல் மங்கிக் கிடக்கும் இந்த அரண்மனை, அதன் இளவரசியான தமிழக அரசியலின் அரசி ஜெயலலிதா இருந்த காலத்தில் எப்படி இருந்தது என்பதை சற்றே ரீவைண்ட் செய்து பாருங்கள். இந்த வீட்டை சுற்றி இருக்கும் வீதிகளில் காஸ்ட்லி கார்களில் இந்த நாட்டின் பல வி.ஐ.பி.க்கள் காத்துக் கிடப்பார்கள். ஏழுமலையான் தரிசனத்துக்கு காத்துக் கிடக்கும் பக்தாள்கள் போல் அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.க்களும் ராப்பகலாய் உட்கார்ந்திருப்பார்கள். எல்லாம், அம்மாவின் தரிசனத்துக்காகத்தான். 

தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி முகம் காட்டுகிறதென்றால் வேதா நிலைய பால்கனியில் வந்து நின்று, வாசலில் குவிந்து கிடக்கும் தொண்டர்களை ஜெ., உற்சாகப்படுத்துவார். தோல்வி முகம் தெரிகிறதென்றால் ஜெ., தோன்றாத அதே பால்கனியை நோக்கி தொண்டர்கள் ’அம்மா கவலைப்படாதீங்க! விரைவில் உங்க ஆட்சிதான்’ என்று தேறுதல் சொல்வார்கள். வென்றாலும் கூட்டம், தோற்றாலும் கூட்டம் என்பதுதான் போயஸ் கார்டனின் ஜாதகம். ஆனால் இன்று பேப்பர் போடும் பையன் கூட அந்த வீட்டுப்பக்கம் திரும்புவதில்லை. 

முதல்வராக ஜெ., இருந்த காலங்களில் போயஸ் கார்டன் வீடு இருக்கும் திசையை பார்ப்பவனை கூப்பிட்டு மெட்டல் டிடெக்டரில்
முக்கியெடுத்துவிடும் காவல்துறை. ஆனால் இன்று வெறும் எஸ்.எஸ்.ஐ. தலைமையில் சில போலீஸ்காரர்கள் மட்டும் ரிலாக்ஸ்டாக காவலுக்கு நிற்கிறார்கள். 

ஜெயலலிதாவின் பிரத்யேக சமையல் பெண்மணியான ராஜம்மாளுக்கு, அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலர் சென்னையில் ஒரு இடத்தில் வீடு எடுத்து குடியமர்த்தியுள்ளதாக வரும் தகவல் மட்டும் நிம்மதி தருகிறது. ஜெயலலிதாவின் ஆஸ்தான உதவியாளரான பூங்குன்றன் ஆறுமுகசாமி விசாரணை கமிஷனுக்கு காவடி தூக்கி வருகிறார் பாவம். 

ஜெயலலிதாவின் இல்லத்தை அரசுடமையாக்க முடிவெடுத்து அதற்கான அடிப்படை சம்பிரதாய செயல்பாடுகள் துவங்கின. ஆனால் அவரது மருமகள் தீபா, அந்த வீட்டுக்கு உரிமை கோரி நீதிமன்றம் சென்றுள்ளதால் அந்த வீட்டை ஜெயலலிதாவின் நினைவில்லமாக்க மாற்றும் முயற்சி முடங்கிக் கிடக்கிறது. 

ஆக மொத்தத்தில் வேதா நிலையத்தின் இப்போதைய நிலை வேதனை நிலையமாகத்தான் இருக்கிறது! அந்த அம்மாவின் பெயரை சொல்லி ஆட்சி செய்யும் தலைவர்கள் இந்த வீட்டின் பழைய பெருமைக்கு ஏதோ ஒரு வகையில் வெள்ளை அடித்தால் ஜெயலலிதாவின் ஆத்மா சந்தோஷிக்கும்! செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா!

click me!