
முதல்வர் பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப் பெற்றதற்காக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார் சபாநாயகர். தங்கள் தகுதிநீக்கம் செல்லாது என அறிவிக்கக்கோரி எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவுடன் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மறு உத்தரவு வரும்வரை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கூடாது எனவும் எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கத்தை செல்லாது என அறிவிக்க மறுத்தும் அதேநேரத்தில் அந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை வழக்கு முடியும் வரை நடத்தக்கூடாது எனவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், எம்.எல்.ஏக்களின் தகுதிநீக்கம் செல்லாது என நீதிமன்றம் அறிவித்துவிடும் என்பது தெரிந்தே தகுதிநீக்கம் செய்ததாக அதிமுக எம்.பிக்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்றம் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை சென்று இந்த வழக்கு முடிவதற்கு 6 மாதகாலம் ஆகிவிடும். அதற்குள் சட்டமன்றம் கூடும்போது இருக்கும் எம்.எல்.ஏக்களை வைத்து பெரும்பான்மையை நிரூபித்து விடுவோம்.
வழக்கு முடிவதற்குள் 18 எம்.எல்.ஏக்களையும் சரிகட்டிவிடுவோம். பின்னர் கட்சியில் ஒரு தீர்மானம் நிறைவேற்றி மன்னிப்பு வழங்கி தகுதிநீக்கத்தை ரத்து செய்துவிடுவோம் என்று அதிமுக எம்.பிக்கள் வட்டாரம் தெரிவித்துள்ளது.
முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்கும் நடவடிக்கை நடந்து வருவதாகவும் சின்னம் மீட்கப்பட்டால் எம்.எல்.ஏக்கள் அவர்களாகவே வந்து இணைந்துவிடுவர் என்ற நம்பிக்கையில் முதல்வர் பழனிச்சாமி தரப்பினர் உள்ளனர்.