
ப.சிதம்பரம் எப்போவாவதுதான் வாய் திறப்பார் அதுவும் நறுக்கென நாலு வார்த்தைகளாகத்தான் இருக்கும். தனது வழக்கமான ஸ்டைலில் அ.தி.மு.க.வின் தற்போதைய நிலையை பற்றி வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிவிட்டுள்ளார்.
சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ புரட்டியெடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு மீது அடக்கமாட்டாத ஆத்திரத்திலிருக்கும் சிதம்பரம் ‘கோபத்தை என் மீது காட்டுவதை விடுத்து என் மகன் மீது பாய்வது அபத்தமான அரசியல். எத்தனை அடக்குமுறைகளை கையாண்டாலும் என் குரலை நிறுத்திவிட முடியாது. நான் பேசிக்கொண்டுதான் இருப்பேன்.’ என்று கொதித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழக சட்டப்பேரவை தலைவர் தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை பற்றி அறிக்கை வெளியிட்டுள்ள சிதம்பரம் “எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது பாரபடசமானது. பெரும்பான்மை இல்லாத தமிழக அரசை காப்பாற்றுவதற்காக எடுக்கப்பட்டு முடிவு என்பதும் அப்பட்டமாக தெரிகிறது.
மூழ்கும் கப்பலை எதைச் செய்தாலும் காப்பாற்ற முடியாது.” என்று அ.தி.மு.க.வை உரசியிருக்கிறார்.
இதை வாசித்த எடப்பாடி அணி அ.தி.மு.க. நிர்வாகிகள் ‘எங்கள் கட்சியை மூழ்கும் கப்பல் என்று மூழ்கி முடங்கிப்போன காங்கிரஸின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு சிதம்பரம் சொல்லியிருப்பதுதான் இந்த ஆண்டின் மிகப்பெரிய காமெடி.’ என்று தாளித்து தள்ளியிருக்கிறார்கள்.