
கமல்ஹாசன் ‘பிக்பாஸ்’ ஷோவின் நெறியாளராக கமிட் ஆன தகவல் உறுதியான போது வந்து விழுந்த விமர்சனங்களில் சில...
* விஜய் டி.வி.யில இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் சின்ன சூப்பர்ஸ்டார் ஆயிட்டாரு. ஆனா வெள்ளித்திரையில ஜொலிச்ச கமல் விஜய் டி.வி.க்கு போயிட்டாரு. இதுதான் டா வாழ்க்கை.
* தனது நிதி நெருக்கடி பிரச்னையை சரி செய்யவே கமல் டி.வி. ஷோவுக்குள் நுழைகிறார்.
* ஒரு கட்டத்தில் டி.வி. ஷோவினுள் நுழைந்ததன் மூலம் தானும் சாதாரண நடிகன் தான் என்பதை கமலும் உறுதி செய்திருக்கிறார்.
---இவையும், இன்ன பிறவும்.
ஆனால் கமலின் மனசாட்சியாக, அவரது நிழலாக உலவுபவர்கள் ’கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமிட் ஆனதில் ஏதோ ஒரு பெரிய உள்ளர்த்தம் இருக்கிறது!’ என்று தங்களுக்குள் முணகிக் கொண்டார்கள்.
அந்த புதிருக்கான விடை இன்று அவர்களுக்கு மட்டுமில்லை எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. அரசியலில் அடியெடுத்து வைக்கும் முடிவை கமல் என்றோ எடுத்துவிட்டார்! அதற்கான சுய தயாரிப்பு பணிகளிலும் எப்போதோ இறங்கிவிட்டார். அதன் நீட்சிதான் பிக் பாஸ் ஷோவில் கமிட் ஆனது.
இன்றைய தேதிக்கு வெகு ஜனத்தை சென்றடைய இரண்டே வழிகள்தான். வயதானவர்களை சென்றடையும் வழி டி.வி. ! வயது வந்தோரை சென்றடையும் வழி இணையம்! இந்த இரண்டிலுமே பிக் பாஸ் சக்கபோடு போடுகிறது. பிக் பாஸின் முகமாக கமல் இருப்பதால் தினம் தினம், நொடிக்கு நொடி தமிழர்கள் மட்டுமில்லாது தென்னிந்தியா முழுக்கவுமே அப்டேட் ஆகிக் கொண்டேயிருக்கிறார் கமல்.
’ஊரறிந்த பிராமணருக்கு பூணூல் தேவையில்லை’ என்பார்கள். கமல் பிராமணர்தான், ஊரறிந்தவரும்தான். ஆனால் மகா நடிகனாக மட்டுமே அவர்கள் மனதில் பதிந்திருக்கிறார். ஊராரின் உள்ளத்தினுள், அவல அரசியலில் இருந்து அவர்களை கைதூக்கி கரை சேர்க்க வந்த மீட்பராக தடம் பதிக்க இந்த ஷோவை மிக துல்லியமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் கமல்.
நன்றாக கவனியுங்கள், மக்களின் மனதில் தன் அரசியல் ஆளுமையை கொஞ்சம் கொஞ்சமாக நிலை நிறுத்தி படிப்படியாக பல்ஸை ஏற்றிக் கொண்டிருக்கிறார் கமல். முன்பெல்லாம் பிக்பாஸ் வீட்டினுள் உள்ளவர்களுடன் கேமெரா வழியே கலந்துரையாடும்போது அந்த வீட்டினுள் நடக்கும் விஷயங்கள் மற்றும் ஒவ்வொரு போட்டியாளரின் தனிப்பட்ட இயல்புகளை மட்டுமே டீல் செய்வார்.
ஆனால் கடந்த சில வாரங்களாக கமலால் பிக்பாஸின் முகம் மாறியிருக்கிறது. அனிதா விவகாரத்தை அந்த கார்ப்பரேட் ஷோ மேடையிலேற்றி பொதுப்பிரச்னையாக அதை மாற்றிக்காட்டினார். ’எனக்கும் மகள் போன்றவளே அனிதா’ என்று கமல் தழுதழுத்தபோது தமிழகத்தின் கண்களில் நீர்த்திரை.
அரசியல் கட்சி துவங்கும் ஒரு நபருக்கு அறிமுகம் அவசியம். கமலுக்கு அடிப்படை அறிமுகம் தேவையில்லை ஆனால் இதுவரையில் தன்னை கலர் சட்டை கதாநாயகனாக பார்த்த மக்கள் இனி தன்னை கரை வேஷ்டி தலைவனாக பார்க்க வைக்க வேண்டியது மிகப்பெரிய சவால். அதை மிக அநாயசமாக கிட்டத்தட்ட செய்து முடித்துவிட்டார் கமல்.
கமலின் தொடர் ட்விட்டர் மற்றும் பிக்பாஸ் ஷோ தாக்குதலால் கிட்டத்தட்ட நிலை குலைந்து கிடக்கிறது ரஜினியின் ராஜாங்கம்.
குஜராத் முதல்வரான மோடி பிரதமராகும் ஒரு முயற்சியின் முனைப்பாக ரஜினியின் வீடு தேடி வந்தது ஆதாய அரசியல். ஆனால் தலைநகர் டெல்லியின் முதல்வர் கெஜ்ரிவால், கமல்ஹாசனை தேடி பேச வருவதுதான் ஆம் ஆத்மியின் வெற்றி!
ஆம் இது சாதாரண மனிதனுக்கான கமலின் வெற்றி!