
ஏழைகளுக்கான நவோதயா பள்ளிகளை எதிர்ப்பார்கள்; ஆனால் அவர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துவார்கள் என திமுகவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு திமுக, திக, பாமக உள்ளிட்ட கட்சிகளை விமர்சித்து டுவீட் செய்த தமிழிசை, இன்று மீண்டும் விமர்சித்து டுவீட் செய்துள்ளார்.
மத்திய அரசு பள்ளியான நவோதயா பள்ளிகளை இந்தி திணிப்பு என்ற காரணத்தைக் கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. திமுகவின் இந்த நவோதயா பள்ளி எதிர்ப்பை விமர்சித்து பதிவிட்டுள்ள டுவீட்டில், தமிழகத்தில் உள்ள ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தரமான கல்வியை வழங்கும் நவோதயா பள்ளிகளை எதிர்ப்பார்கள்; ஆனால் அவர்கள் மட்டும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்துவார்கள் என விமர்சித்துள்ளார்.
மேலும் திமுகவின் துரோக வரலாறை மறக்க முடியுமா? என்ற ஒரு பதிவையும் தமிழிசை பதிவிட்டுள்ளார்.
திமுகவை விமர்சித்த தமிழிசை, விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் விட்டுவைக்கவில்லை. திருமாவளவன் நடத்தும் மாநில சுயாட்சி மாநாட்டிற்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் அழைக்கப்பட்டுள்ளார். இதை விமர்சிக்கும் வகையில், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிக்க துணைநின்ற சோனியாவின் காங்கிரஸை தேடிச்சென்று துணைதேடும் திருமா... இலங்கைத் தமிழர் மீதான பாசம் தற்போது எங்கே போனது? என பதிவிட்டுள்ளார்.