
தானும் கெட்டு தன்னை நம்பிவந்தவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார் என தினகரனை முதல்வர் பழனிச்சாமி குட்டிக்கதை சொல்லி கிண்டலாக விமர்சித்தார்.
நாகை மாவட்டம் பாளையூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிச்சாமி, 20 மண்பாண்டங்களை விற்க முடியாமல் தவித்த குயவன் ஒருவனுக்கு அதனை விற்கும் வாய்ப்புக் கிடைத்தது. வேறுவேலை இருந்தால் பார்த்து வாருங்கள், கொஞ்ச நேரத்தில் நான் எல்லாப் பானைகளையும் அடுக்கி கட்டித்தருகிறேன் என்று கூறி, பானைகளை அடுக்கிக் கட்டிவைத்துவிட்டு அருகில் அமர்ந்தவன் கற்பனையில் மிதக்கத் தொடங்கிவிட்டான்.
இந்த பானைகளை விற்று அப்பணத்தை பல மடங்காகப் பெருக்கி, திருமணம் செய்து கொண்டு குழந்தையும் பெற்று வாழும்வரை கனவு கண்டான். அந்த குழந்தை அழுதுகொண்டே அம்மாவைப் பற்றி குறைகூற, எங்கே உங்கள் அம்மா? என்று எட்டி உதைத்தான். 20 பானைகளும் உடைந்து அழிந்தன.
இப்படித்தான் சிலபேர் கற்பனையில் தானும் கெட்டு, தன்னை நம்பி வந்தவர்களையும் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தான் கெட்டாலும் பரவாயில்லை, பிறரைக் கெடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த கதையை கூறி முடித்துவிட்டு தான் யாரை குறிப்பிடுகிறேன் என்பது உங்களுக்கே தெரியும் என மக்களிடம் தெரிவித்தார். தினகரன் தானும் கெட்டு தனக்கு ஆதரவாக உள்ள 18 எம்.எல்.ஏக்களையும் கெடுத்துவருவதாக விமர்சித்த முதல்வர், தினகரன் கெட்டாலும் பரவாயில்லை. ஆனால் எம்.எல்.ஏக்களை கெடுப்பதை நிறுத்த வேண்டும் என எச்சரிக்கும் தொனியில் தினகரனை விமர்சித்தார்.