கதறப்போகும் கேடிஆர்.?? ஆவணங்களை திரட்டி ரவுண்டுகட்டும் லஞ்ச ஓழிப்பு துறை. சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்.

Published : Aug 05, 2021, 06:08 PM ISTUpdated : Aug 05, 2021, 06:17 PM IST
கதறப்போகும் கேடிஆர்.?? ஆவணங்களை திரட்டி ரவுண்டுகட்டும் லஞ்ச ஓழிப்பு துறை. சொத்து குவிப்பு வழக்கில் திருப்பம்.

சுருக்கம்

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்கள் திரட்டி வருவதாக தமிழக காவல்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த 2011 முதல் 2013 வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில்  தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் 2013ஆம் ஆண்டு வழக்கு  தொடர்ந்தார். அதில், ராஜபாளையம் அருகே தேவதானத்தில் 74 லட்சம் ரூபாய் மதிப்பிற்கு 35 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாகவும், இந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 6 கோடி ரூபாய் எனவும், அதே போல் திருத்தங்கல் பகுதியில் 23.33 லட்சத்துக்கு 2 வீட்டுமனைகளும், 4.23 லட்சத்திற்கு 75 சென்ட் நிலமும் வாங்கியுள்ளார் என்றும், இந்த சொத்தின் சந்தை மதிப்பு 1 கோடிக்கு அதிகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வருமானத்திற்கு அதிகமாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 7 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் இது தொடர்பாக  லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே எனது புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு விசாரணையின் போது,  லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதில், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, 2011 மே 23 முதல் 2013 ஏப்ரல் 20 வரையிலான காலத்தில் அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது என்றும், விசாரணை நடத்திய அதிகாரி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என்றும், இதனால் அவர் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தேவையில்லை என்றும், அதனால் விசாரணையை தொடர வேண்டியதில்லை என்றும் கூறி, வழக்கை முடிக்கவும் பொது துறை உத்தரவிட்டதாதாக கூறப்பட்டு இருந்தது. அரசு தரப்பில்  ஆஜரான வழக்கறிஞர்  கூறுகையில்,  ஆரம்ப கட்ட விசாரணையில் போதிய முகாந்திரம் இல்லை, அரசு  அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளாகவே அவரது  வருமானம்  உள்ளது என கூறினார். இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தீர்ப்பளித்த  நீதிபதிகள் எம்.சத்தியநராயணன் மற்றும் ஆர்.ஹேமலதா ஆகியோர் மாறுபட்ட  தீர்ப்பளித்தனர். முதலில் தீர்ப்பை வாசித்த நீதிபதி சத்தியநாராயணன், சொத்து குவிப்பு புகார் குறித்து அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டுமென உத்தரவிட்டார். பின்னர் தீர்ப்பை வாசித்த நீதிபதி ஹேமலதா, நீண்ட இடைவெளிக்கு பிறகு வழக்கு பதிந்து விசாரிப்பது செத்த குதிரையின் மீது சவுக்கடி கொடுப்பது போல் ஆகும் என்பதால், மேற்கொண்டு விசாரிப்பதால் எவ்வித பலனும் இல்லை என்று கூறி, மகேந்திரன் வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். இரு நீதிபதிகளிடையேயான மாறுபட்ட தீர்ப்பால் வழக்கை மூன்றாவது  நீதிபதியாக  எம்.நிர்மல்குமார் நியமிக்கப்பட்டார். அவர் முன்பு இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜ்மல்கான், இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால், வழக்கு விசாரணை தள்ளிவைக்க  வேண்டுமென கோரிக்கை வைத்தார். 

லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து குவிப்பு  புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை நடத்த தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்த எந்த தடையும் இல்லை என்று தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!