
குடமுழுக்கின் போது விருப்பத்தின் பேரில் ஆகம விதிகளின் படி தமிழ் மொழியிலும் அர்ச்சனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் 'அன்னை தமிழில் அர்ச்சனை' திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், ‘’பெரும்பான்மை மக்களின் விருப்பம் எதுவோ, அப்படியே அரசு செயல்படும். அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுவதே அரசின் கடமை. சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல், எந்த மதத்தினரின் மனமும் புண்படாமல் முதலமைச்சர் முடிவெடுப்பார்.
தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களின் பெயர்கள் மற்றும் எண்களின் பதாகைகள் கோயிலில் வைக்கப்படும். 539 கோவில்களிலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் விரிவுபடுத்தப்படும்’’ என அவர் தெரிவித்தார்.