சொத்துவரி, மின் கட்டணம் வரிசையில் தற்போது பால் விலை உயர்வு.. திமுக அரசை தூக்கி எறியுங்கள்.. ஓபிஎஸ் ஆவேசம்..

By Thanalakshmi V  |  First Published Nov 4, 2022, 4:07 PM IST

ஒரு லிட்டர்‌ ஆரஞ்சு பால்‌ பாக்கெட்டின்‌ விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும்‌, சில்லறை விலையில்‌ வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இதனை இன்று முதல்‌ ஒரு லிட்டர்‌ 60 ரூபாய்‌ என ஆவின்‌ நிறுவனம்‌ உயர்த்தியிருப்பது கண்டணத்திற்குரியது என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.


இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,” ஆண்டிற்கு 6,000 ரூபாய்‌  பணத்தை சேமிக்கும்‌ வகையில்‌, 'மாதம்‌ ஒரு முறை மின்‌ கட்டணம்‌ நடைமுறைப்படுத்தப்படும்‌” என்று அறிவித்த தி.மு.க., ஆட்சிப்‌ பொறுப்பிற்கு வந்த பிறகு மின்சாரக்‌ கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி ஆண்டொன்றுக்கு 10,000 ரூபாய்‌ அளவுக்கு மக்கள்‌ மீது கூடுதல்‌ சுமையை ஏற்படுத்தியது. 

இதேபோல்‌, “கொரோனாவால்‌ பாதிக்கப்பட்ட பொருளாதாரம்‌ மீண்டும்‌ மேம்படும்‌ வரையில்‌ சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது” என்று அறிவித்த தி.மு.க, பொருளாதாரம்‌ மேம்படாத சூழ்நிலையில்‌ சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி, மக்கள்‌ மீது கூடுதல்‌
சுமையை ஏற்படுத்தியுள்ளது. இவையெல்லாம்‌, தேர்தல்‌ வாக்குறுதிகளுக்கு முற்றிலும்‌ முரணான அறிவிப்புகளுக்கான ஒருசில உதாரணங்கள்‌.

Tap to resize

Latest Videos

தமிழகம்‌ முழுவதும்‌ இலவசமாக உள்ளூர்‌ பேருந்துகளில்‌ மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும்‌ என்ற தேர்தல்‌ வாக்குறுதியை தி.மு.க. அளித்து இருந்தது. ஆட்சிப்‌ பொறுப்பிற்கு வந்தவுடன்‌ இதனை நிறைவேற்ற உத்தரவிட்டு, அந்த உத்தரவு அமலுக்கு வந்தது. சிறிது நாட்களுக்குள்ளேயே சில குறிப்பிட்ட பேருந்துகளுக்கு மட்டும்‌ முன்பக்கம்‌ 'இளஞ்‌ சிவப்பு” நிறம்‌ பூசப்பட்டு, அந்தப்‌ பேருந்துகளில்‌ மட்டும்தான்‌ மகளிருக்கு இலவசம்‌ என்ற முறை அமலுக்கு வந்தது. 

மேலும் படிக்க:ஆரஞ்சை தொடர்ந்து நீலம், பச்சை பால் பாக்கெட் விலையை உயர்த்த திமுக திட்டம்.. அதிர்ச்சி தகவல் கூறும் டிடிவி..!

இதன்‌ விளைவாக, இலவசமாக பயணம்‌ செய்வோரின்‌ எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டது. இது மட்டுமல்லாமல்‌, மகளிரை கொச்சைப்படுத்தும்‌ சம்பவங்களும்‌ நடைபெற்றன. இதன்‌ காரணமாக இலவசப்‌ பயணத்தையே கைவிடும்‌ மன நிலைக்கு மகளிர்‌ வந்துவிட்டனர்‌. சுருக்கமாகச்‌ சொல்ல வேண்டுமென்றால்‌ இந்தச்‌ சலுகையை நீர்த்துப்‌ போகச்‌ செய்துவிட்டது தி.மு.க. அரசு.

இதேபோன்று, தேர்தல்‌ வாக்குறுதியை நிறைவேற்றும்‌ பொருட்டு ஆவின்‌ பால்‌ விலையை லிட்டருக்கு 3 ரூபாய்‌ அளவுக்கு குறைத்த தி.மு.க., இதனால்‌ ஏற்படும்‌ இழப்பினை ஈடுகட்டும்‌ வகையில்‌, இந்த ஆண்டு மார்ச்‌ மாதத்தில்‌ பால்‌ உப பொருட்களான தயிர்‌, நெய்‌, பாதாம்‌ பவுடர்‌, ஐஸ்க்ரீம்‌ வகைகள்‌ போன்றவற்றின்‌ விலையை 20 சதவிகிதம்‌ அளவிற்கு உயர்த்தியது. 

மேலும் படிக்க:”20 லட்சம் கொடு” என்றால் நடுத்தர மக்கள் என்ன செய்வார்கள்.. கே.எஸ்.அழகிரி பகீர் குற்றச்சாட்டு

இந்தச்‌ சூழ்நிலையில்‌, பொட்டலங்களில்‌ அடைக்கப்பட்ட பல்வேறு பொருட்களுக்கு பொருட்கள்‌ மற்றும்‌ சேவைகள்‌ வரியை மத்திய அரசு விதித்து இருக்கிறது என்று சுட்டிக்காட்டி நெய்‌, தயிர்‌, மோர்‌ ஆகியவற்றின்‌ விலைகளை ஜி.எஸ்‌.டி. வரிக்கு மேல்‌ இரண்டு மடங்கு விலையை உயர்த்தியது தி.மு.க. அரசு.

தற்போது, ஒரு லிட்டர்‌ ஆரஞ்சு பால்‌ பாக்கெட்டின்‌ விலை அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கும்‌, சில்லறை விலையில்‌ வாங்குபவர்களுக்கு 48 ரூபாய்க்கும்‌ விற்பனை செய்யப்படுகிறது. இதனை இன்று முதல்‌ ஒரு லிட்டர்‌ 60 ரூபாய்‌ என ஆவின்‌ நிறுவனம்‌ உயர்த்தியிருப்பதாக தகவல்கள்‌ வருகின்றன.

ஒரு லிட்டர்‌ பால்‌ விலை 12 ரூபாய்‌ அளவுக்கு, அதாவது 25 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில்‌, கொள்முதல்‌ விலையை லிட்டருக்கு 10 ரூபாய்‌ உயர்த்தித்‌ தர வேண்டுமென்று விவசாயிகளும்‌, பால்‌ விற்பனையாளர்களும்‌ கோரிக்கை விடுத்த நிலையில்‌, லிட்டருக்கு மூன்று ரூபாய்‌ மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மொத்தத்தில்‌, பொதுமக்களும்‌, பால்‌ உற்பத்தியாளர்களும்‌ ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்‌.

மேலும் படிக்க:யார் இந்த இசுதான் கத்வி.? பத்திரிகையாளர் டூ ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர்.. குஜராத் தேர்தல் பரபர!

சாதாரண பாக்கெட்‌ பாலினை விட ஆரஞ்ச்‌ பாக்கெட்‌ பாலில்‌ நிறைய பேர்‌ டீ, காபி சாப்பிடலாம்‌ என்ற அடிப்படையில்‌ ஏழை, எளிய மக்களும்‌, சாதாரண டீ கடை வைத்திருப்போரும்‌ ஆரஞ்ச்‌ பால்‌ பாக்கெட்டினை வாங்குகின்றார்கள்‌. இந்தப்‌ பாலின்‌ விலையை லிட்டருக்கு 12 ரூபாய்‌ உயர்த்தியிருப்பதன்‌ மூலம்‌, டீ மற்றும்‌ காபி விலைகள்‌ மீண்டும்‌ உயரக்கூடிய அபாய நிலையும்‌, ஏழை எளிய மக்கள்‌ பாதிக்கப்படக்கூடிய பரிதாப நிலையும்‌ உருவாக தி.மு.க. அரசு வழி வகுத்துள்ளது.

அடுத்ததாக பச்சை பாக்கெட்‌ பால்‌ விலையை உயர்த்துதல்‌, நீல பாக்கெட்‌ பால்‌ விநியோகத்தை குறைத்தல்‌, இறுதியாக
அனைத்துப்‌ பாக்கெட்‌ பால்‌ விலைகளையும்‌ உயர்த்துதல்‌ போன்ற மக்கள்‌ விரோத நடவடிக்கைகளைத் தான்‌ தி.மு.க. அரசு படிப்படியாக எடுக்கும்‌ என்ற மன நிலைக்கு பொதுமக்கள்‌, குறிப்பாக ஆவின்‌ பாலினை நம்பியிருக்கும்‌ ஏழை, எளிய மக்கள்‌ வந்துவிட்டார்கள்‌.  இது 'திராவிட மாடல்‌” அரசு அல்ல, “துரோக மாடல்‌” அரசு 

ஏழை, எளிய மக்களை வஞ்சிக்கக்கூடாது என்ற எண்ணம்‌ உண்மையிலேயே தி.மு.க. அரசுக்கு இருக்குமேயானால்‌, பால்‌ விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவும்‌, கொள்முதல்‌ விலையை லிட்டருக்கு 10 ரூபாய்‌ உயர்த்தவும்‌ முதலமைச்சர்‌ நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ .  மக்களை ஏமாற்றுகின்ற தி.மு.க. அரசை, மக்கள்‌ நிராகரிக்கும்‌ நாள்‌ வெகு தூரத்தில்‌ இல்லை என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

click me!