ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியாக இருந்தாலும் அதன் 100 சதவீத வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய முதல் வேலை.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்ற திமுக தமிழகத்தில் ஆட்சி அமைந்துள்ளது. தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் திமுக வெற்றி அடைந்த போதும், கொங்கு மண்டலத்தில் தோல்வியை தழுவியது. எனவே கொங்கு மண்டலத்தை திமுகவின் கோட்டையாக மாற்றும் முயற்சியில் மு.க.ஸ்டாலின் இறங்கியுள்ளார். பொள்ளாச்சியைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் இரு தினங்களுக்கு முன்பு 78 முக்கிய நிர்வாகிகளுடன் திமுகவில் இணைந்தார்.
undefined
அதனைத் தொடர்ந்து முன்னாள் அதிமுக அமைச்சரான தோப்பு வெங்கடாசலம் 900 பேருடன் இன்று திமுகவில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணையும் விழா இன்று நடைபெற்றது. அதில் தோப்பு வெங்கடாசலம் பேசியதாவது: தமிழகத்தில் மாபெரும் சக்தியாக திமுக திகழ்ந்து கொண்டிருந்தாலும் கூட ஈரோடு மாவட்டத்தில் முழுமையான வெற்றி பெற முடியவில்லையே என்ற உங்களுடைய ஏக்கத்தை போக்கும் அணிலாக நாங்கள் வந்திருக்கிறோம். எப்போது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டாலும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கிற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியாக இருந்தாலும் அதன் 100 சதவீத வெற்றியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொற்பாதங்களில் வைப்பது தான் எங்களுடைய முதல் வேலை.
உறக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் திமுகவிற்காக உழைக்க தயாராக இருக்கிறோம். இந்த நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறேன். இன்று அதிமுகவைச் சேர்ந்த 900க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இது வெறும் மணியோசை தான், யானை பின்னால் வரப்போகிறது. மு.க.ஸ்டாலின் மட்டும் அனுமதி கொடுத்தால், ஒரு மாத காலம் அவகாசம் கொடுத்தால் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் தொண்டர்களை திமுகவில் இணைத்துக் காட்டுவேன் என உறுதியளித்தார்.