
பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, தமிழக தலைவர்களைக் கடுமையாக விமர்சித்து வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அவர் வாயை அடக்கிப் பேசாவிட்டால், தமிழகத்தைவிட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார்.
சென்னை, கிழக்கு தாம்பரம், பாரதமாதா சாலை சந்திப்பில் புதிதாக நிறுவப்பட்டுள்ள காமராஜர் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக பல்வேறு கட்சிகள், மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். போராடுபவர்களுக்கு செவி சாய்க்காமல் கண் துடைப்புக்காக சிறிதளவு கட்டணம் மட்டுமே குறைக்கப்பட்டு உள்ளது. இதில் உடனடியாக தமிழக அரசு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்து அடித்து இருக்கிறார்கள். போலீஸாரின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியது என்று கூறினார். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றார்.
தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மிகவும் மோசமடைந்து உள்ளது. பாஜகவின் ஹெச்.ராஜா தொடர்ந்து தமிழகத் தலைவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இனியும் ஹெச்.ராஜா வாயை அடக்கிப் பேசாவிட்டால், அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார்.