
அரசியலுக்கு உதயநிதி வந்து விட்டாரா என்பதை, அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி, அண்மையில் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், நான் பிறந்ததில் இருந்து அரசியலில் இருக்கிறேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். அது மட்டுமல்லாது, பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொண்டார் உதயநிதி. இதன் மூலம் தனது அரசியல் பயணத்தை தொடங்கியதாக தொடர்ந்து அரசியல் குறித்த கருத்துக்களையும், கட்சி நிர்வாகிகளையும் உதயநிதி சந்தித்து வருகிறார்.
உதயநிதி ஸ்டாலின், முரசொலி அறக்கட்டளையின் தலைவர் பொறுப்பில் இருந்து வருகிறார். கடந்த 7 வருடங்களாக அவர் இந்த பொறுப்பில் இருந்து வருகிறார். ஆனாலு, நேரடி அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த உதயநிதி, முரசொலி பவள விழ நிகழ்ச்சிகளில்தான் மேடைக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்தார்.
ரஜினி, கமல், விஷால என நட்சத்திர பட்டாளம் மொத்தமும், அரசியலை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இதனைப் பார்த்த உதயநிதி, உள்ளே இறங்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வரும் நிலையில், அவரது தந்தையும், திமுக செயல் தலைவரான மு.க.ஸ்டாலினிடம், உதயநிதி அரசியல் வருகை குறித்து செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஸ்டாலின், உதயநிதி அரசியலுக்கு வந்து விட்டாரா? என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.