
அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளுள் ஒன்று மனிதநேய ஜனநாயக கட்சி. ஜவாஹிருல்லாஹ்வின் மனிதநேய மக்கள் கட்சியிலிருந்து உடைத்துக் கொண்டு வெளியேறி ஜெயலலிதாவிடம் ஒரு சீட்டை வாங்கி வெற்றி பெற்று அரசியல் செய்து கொண்டிருக்கும் கட்சி இது. இந்நிலையில் இந்த கட்சியும் இரண்டாக பிளக்கும் நில உருவாகியுள்ளது. காரணம்? அதன் தலைவர் தமீமுன் அன்சாரி மீது வெடித்துக் கிளம்பியிருக்கும் சர்ச்சைகள்தான்.
இந்த கட்சியின் திருநெல்வேலி கிழக்கு, மேற்கு, மதுரை வடக்கு தெற்கு, திண்டுக்கல், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களின் செயலாளர்கள், பொருளாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்கள் ஆகியோர் சமீபத்தில் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இனி என்ன செய்யலாம்? என்று சமீபத்தில் ஈரோட்டில் சந்தித்து ஆலோசித்திருக்கின்றனர்.
ஆலோசனைக்கு பின் அவர்கள் தமீமுன்னை புரட்டியெடுத்து விமர்சித்திருக்கின்றனர் “கூவத்தூர் ரிசார்ட்டிலிருந்து தப்பி வந்த மதுரை எம்.எல்.ஏ. சரவணன் ‘தமீமுன் அன்சாரி, கருணாஸ் மற்றும் தனியரசு ஆகியோருக்கு தலா 20 கோடி கொடுக்கப்பட்டிருக்கிறது.’ என்றார். இது உண்மையா? என தமீமுன்னிடம் கேட்டபோது ‘அல்லாஹ் மீது ஆணையாக நான் பணம் வாங்கவில்லை.
சரவணன் மீது மான நஷ்ட வழக்கு போடுவேன்.’ என்றார். நாங்களும் நம்பினோம். ஆனால் சொன்னபடி தமீமுன் வழக்கு போடவில்லை. அதன் காரணம் என்ன? பணம் வாங்கியிருக்கவில்லை என்றால் வழக்கு போட வேண்டிதானே!
எங்களுக்கு வாரியத்தலைவர் பதவியையும் பெற்றுத் தரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் அன்சாரி, துரோக அரசியலையும் தாண்டி புரோக்கர் அரசியல் நடத்துகிறார். கூவத்தூரில் 20 கோடி வாங்கினாரா என்பது பற்றி விசாரணை கமிஷன் அமைக்க வலியுறுத்துகிறோம்.
எங்களது உழைப்பை சுரண்டி பணம் சம்பாதிக்கிறார் அன்சாரி. கேள்வி கேட்டால் மிரட்டுகிறார். இப்போது நாங்கள் வெளியேறியிருக்கிறோம். கூடிய விரைவில் பலர் வெளியேறி அந்த கட்சியே காலியாக போகிறது.” என்றிருக்கிறார்கள்.
ஆனால் அன்சாரியோ இதை மறுத்து, “கட்சி வளர்ச்சிக்காக சில நடவடிக்கைகளை எடுத்தோம். கட்சி பலவீனமாக உள்ள மாவட்டங்களில், பழைய நபர்களை எடுத்துவிட்டு புதிய நிர்வாகிகளை நியமித்தோம். இப்படி விடுவிக்கப்பட்டவர்கள்தான் அதிருப்தியில் பொய் பேசிவருகிறார்கள்.
நான் பணம் வாங்கியதாக பேசிய சரவணன் எம்.எல்.ஏ.வுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர் ‘நீங்கள் பணம் வாங்கியதாக நான் கூறவில்லை.’ என்று பதில் அனுப்பினார். இப்படி சொன்ன பின் எப்படி வழக்கு போட முடியும்?
ஜெயலலிதா மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வோடு சுமூக உறவில்லை. இந்நிலையில் எப்படி எங்கள் கட்சிக்கு வாரிய தலைவர் பதவி கிடைக்கும்? இதைப் புரிந்து கொள்ளாமல் சகோதரர்கள் கோபப்படுகிறார்கள்.” என்று பதில் சொல்லியிருக்கிறார்.
எப்படியோ விரிசல் உருவாகிவிட்டது!