நிலை தடுமாறி செய்தியாளர்களிடம் பேசிய காரணத்தால் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறி கொட்டி இருக்கிறீர்கள். இந்த உளறலே கடைசியாக இருக்கட்டும்.
தமாகா தலைவர் வாசன், உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் உங்களை இப்படி உளற வைக்கிறது என யுவராஜா கடுமையாக சாடியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயஞ் செய்து விடல்”என்ற வான் புகழ் கொண்ட வள்ளுவனின் வாக்கிற்கேறப வாழ்பவர் ஜி.கே வாசன். ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் கடந்த கால அரசியல் வரலாறு தடுமாற்றம் நிரம்பிய தடைபட்ட அரசியல் பயணம். எங்கும் எதிலும் எப்போதும் நிலைத்ததும் இல்லை நின்று பேசியதும் இல்லை. தனக்கு வாயில் வந்ததை பேசிவிட்டு தவறாக பேசிவிட்டோம் என்று மன்னிப்பு கேட்கும் பழக்கம் அவருக்கு அரசியல் வழக்கமாக உள்ளது.
இதையும் படிங்க;- வாசன் மனசாட்சி உள்ளவர், அவரே அவருக்கு ஓட்டு போடமாட்டார்.!அவர் குடும்படும் அவருக்கு ஓட்டு போடாது-ஈவிகேஎஸ்
நீங்கள் 1988-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஆதரவு தந்து காங்கிரஸ் வேட்பாளரை வென்று சட்டமன்றத்தில் நுழைந்தீர்கள். தங்களின் நடவடிக்கையால் அப்போதைய சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியனால் சபையை விட்டே ஓரம்கட்டப்பட்டீர்கள். பிறகு சிவாஜி, உங்களால் அதலபாதாளத்துக்கு சென்றதை நாடே அறியும். 2000-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் தலைமை தங்களை அங்கீகரிக்காத காலத்தில் மறைந்த சுலோச்சனா சம்பத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தங்களை நியமிக்க சோனியாவிடம் பேசி பெற்றுத்தந்த தலைவர் மூப்பனார் என்பதை நீங்களும் மறந்து விட்டீர்கள், உங்கள் நாக்கும் மறந்துவிட்டது.
2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் உதவியை நாடியதை மறந்துவிட்டு பேசுவதா? 2004-ம் ஆண்டு நீங்கள் போட்டியிட்டபோது வாசன் பிரச்சாரம் மேற்கொண்டு உங்களுக்காக வாக்கு சேகரித்தபோது கை கூப்பி வாசனின் பின்புறம் நின்றதை மறந்துவிட்டு பேசுவதா?
2009-ல் இருந்து 2014 உங்களுடைய தோல்விக்கு பிறகு மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே வாசன், தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள செல்லும்போது தங்களையும் உடன் அழைத்து சென்று தங்களை காரின் முன் இருக்கையில் அமரவைத்து அழைத்து சென்றதையும், நிகழ்ச்சியில் அவருடன் தாங்கள் பங்கேற்கும் போது பத்திரிக்கையாளர்களே தங்களுடைய பெயரை போடத்தயங்கிய தருணத்தில், தங்களையும் முன்னிறுத்தி அழகு பார்த்த பெருமை தலைவர் வாசன் என்பதை மறந்துவிட்டீர்களா?
2014-ம் ஆண்டில் ஜி.கே வாசன், அவரது வீட்டில் பத்திரிக்கையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்தபோதே எங்கு நீங்கள் தமிழ் மாநில காங்கிரஸில் ஐக்கியமாகி விடுவீர்களோ, என்று காங்கிரஸ் தலைவர் பதவியை சோனியா காந்தி கொடுத்தபோது அதை எங்கள் தலைவர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்ததை இப்போது நினைவு கூற விரும்புகிறேன். நீங்கள் பங்கேற்ற அனைத்து தேர்தல்களிலும், வாசன் தேர்தல் பிரச்சாரம் செய்து உங்கள் வெற்றிக்கு வழி வகுத்ததை இன்று நினைவுகூற விரும்புகிறேன்.
இதையும் படிங்க;- பாஜக நோட்டாவை விட கூடுதலாக ஓட்டா.? குறைவான ஓட்டா.? தேர்தலில் பார்த்துவிடுவோம் -இறங்கி அடிக்கும் கீதா ஜீவன்
2017-ல் உடல் நிலையை காரணம் காட்டி ஒரு முதிர்ந்த அரசியல்வாதியாகிய உங்களை எப்படி தலைவர் பதவியை விட்டு நீக்கினார்கள் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும். ஆனால் இன்று தமாகா தலைவர் வாசன், உலகமே போற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நிகராக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் உங்களை இப்படி உளற வைக்கிறது. தங்கள் தொகுதிக்கு அருகிலேயே பல்லாயிரம் பேர் கூடிய பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை பார்க்காத நீங்கள் எப்படி தொகுதியில் மக்கள் படும் துயரங்களைப் பார்க்க முடியும். நாட்டு மக்களுக்கு தாங்கள் எப்படிப்பட்டவர் என்பது நன்கு தெரியும்.
தங்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு இனியாவது இது போன்ற தரம் தாழ்ந்த செயல்களை செய்யாமல் உடல் நிலையை நன்கு கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன். நிலை தடுமாறி செய்தியாளர்களிடம் பேசிய காரணத்தால் என்ன சொல்லுகிறோம் என்று தெரியாமலே உளறி கொட்டி இருக்கிறீர்கள். இந்த உளறலே கடைசியாக இருக்கட்டும். இனியும் தமாகா தலைவர் வாசன் பற்றி பேசுவதை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிறுத்திக் கொள்ள வேண்டும். இனியாவது தங்கள் வயதிற்கேற்ப மரியாதையோடும், பண்போடும் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும் என்று யுவராஜா கூறியுள்ளார்.