தீயசக்தி திமுக மட்டும் வரவே கூடாது... காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச். ராஜா சாபம்..!

By Asianet TamilFirst Published Mar 18, 2021, 10:02 PM IST
Highlights

சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணியே வெற்றி பெறுவோம். திமுக என்ற தீயசக்தி மட்டும் வரவே கூடாது என்று காரைக்குடி பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
 

காரைக்குடி தொகுதியில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் பாஜக வேட்பாளருமான ஹெச்.ராஜா பேசுகையில், “அதிமுக-பாஜக கூட்டணி என்பது இயல்பான, இயற்கையான கூட்டணி ஆகும். இந்தக் கூட்டணி ஆட்சியிலும் தொடர வேண்டும். லாட்டரி சீட்டு விற்பவர்கள் நாளையே கடைசி என்று கூவி கூவி அதை விற்பார்கள். அதேபோல் பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றபோது, எதிர்க்கட்சிகள் இந்த ஆட்சி நாளையுடன் கடைசி என்று கூறின. ஆனால் அவர் நான்கு ஆண்டுகள் ஆட்சியைப் பூர்த்தி செய்துவிட்டார்.
தமிழகத்தில் ரூ.6.10 லட்சம் கோடியில் பல்வேறு திட்டங்களை  மத்திய அரசு செயல்படுத்தியிருக்கிறது. தமிழகத்தில் 12 லட்சம் பேருக்கு வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. விவசாயம் செய்தாலும், செய்யாவிட்டாலும் மத்திய அரசு ரூ.6 ஆயிரம் கொடுக்கிறது. ‘தூய்மை இந்தியா’ திட்டம் என்பது ஊரை சுத்தம் செய்வது மட்டுமல்ல, பெண்களின் மானத்தை காப்பதற்கும்தான் என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார். தாய்மார்களின் ஆரோக்கியத்தை காக்கவே இலவச எரிவாயு திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
கடந்த 1984-ஆம் ஆண்டில் ப.சிதம்பரம் எம்.பி.யானபோது 12 பஞ்சாலைகள் இங்கே இருந்தன. தற்போது ஒன்றுகூட இல்லை. இந்தத் தேர்தலில் ஆளும்கட்சி மீது மக்களுக்கு அதிருப்தி எதுவும் இல்லை. இதை மக்களே சொல்கிறார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் சிவகங்கை மாவட்டத்தில் 4 தொகுதிகளிலும் அதிமுக-பாஜக கூட்டணியே வெற்றி பெறுவோம். திமுக என்ற தீயசக்தி மட்டும் வரவே கூடாது” என்று ஹெச்.ராஜா பேசினார்.
 

click me!