அரைமணி நேரம் மின் தடை ஏற்பட்டால்கூட போன்... மக்களிடம் சகிப்பு தன்மை இல்லை... திமுக அமைச்சர் ஆதங்கம்..!

By Thiraviaraj RMFirst Published Jun 29, 2021, 12:52 PM IST
Highlights

அரைமணி நேரம் மின் துண்டிக்கப்பட்டாலும் மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து விட்டது என மின்தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.

அரைமணி நேரம் மின் துண்டிக்கப்பட்டாலும் மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்து விட்டது என மின்தடை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆதங்கம் தெரிவித்து உள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தபிறகு தமிழகம் முழுவதும் சமீப தினங்களாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்பட்டு வருவதாக மாநில அரசு கூறி வருகிறது. இதற்கிடையில், அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்தடைக்கு அணில் காரணம் என அளந்துவிட்டு, பொதுமக்களிடம் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். இந்நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், அந்த தொகுதி எம்.எல்.ஏ.,வும், மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ’’தமிழ்நாடு மின் வாரியம் வாங்கியுள்ள 1லட்சத்து59ஆயிரம் கோடி கடனுக்காக 9.6 சதவீதம் வட்டி செலுத்தப்படுகிறது. இந்த கடனை குறைத்து 2000 கோடி ரூபாய் அளவிற்கு சேமிக்க வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கடந்த ஆட்சியில் அதிகமான தொகையை செலவழித்து மின்சாரம் வாங்கியுள்ளனர்.

அரைமணி நேரம் மின் விநியோகம் நின்று விட்டாலும் மின் பணியாளர்களுக்கு போன் செய்து தொல்லை கொடுக்கின்றனர். மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது’’ எனத் தெரிவித்தார்.

 

அதைத்தொடர்ந்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘’மின் கணக்கீட்டில் தவறு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மின் கட்டண குளறுபடி குறித்து பயனீட்டாளர்கள் யாரும் இதுவரை எவ்வித புகாரும் அளிக்கவில்லை. உரிய ஆதாரத்தோடு புகார் தெரிவித்தால், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பயன்படுத்தாத மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் கட்ட நேர்ந்தால் அடுத்த கணக்கீட்டின் போது அந்த கூடுதல் கட்டணம்  கழிக்கப்படும்.

தமிழ்நாடு முழுவதும் மின் வெட்டு என பொத்தம் பொதுவாக கூற முடியாது. கடந்த 19-ந்தேதி தொடங்கிய பராமரிப்பு பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளன. தமிழ்நாட்டில் இனி மின்தடை இருக்காது. புதிய மின் திட்டங்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்தடை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும்’’ என தெரிவித்தார்.

click me!