அமமுகவுக்கு ஆபிஸ் கொடுத்தவரும் விலகுகிறார் ! ஆட்டம் காணும் டி.டி.வி.தினகரன் !!

By Selvanayagam PFirst Published Jul 1, 2019, 8:40 PM IST
Highlights

டி.டி.வி. தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவரும் தென் சென்னை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவருமான முன்னாள் அமைச்சர் இசக்கி சுப்பையா தனது ஆதரவாளர்களுடன் அமமுகவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல் தோல்விக்கு பிறகு தினகரன் தலைமையிலான அமமுக முகாமிலிருந்து பல்வேறு நிர்வாகிகளும் அதிமுக ,திமுக என மாற்று கட்சிகளுக்கு செல்வது தொடர்கதையாகி வருகிறது.
 
கட்சியில் இப்போது இருக்கும் பல்வேறு முக்கிய நிர்வாகிகளும் கூட இனியும் அமமுகவில் தொடரலாமா அல்லது வெளியே போகலாமா என்பது பற்றிய விவாதங்களை  நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டி.டி.வி.தினகரனுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் இசக்கி சுப்பையா அம்முகவில் இருந்து விலகப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இசக்கி சுப்பையா கடந்த மக்களவைத் தேர்தலில் தனக்கு திருநெல்வேலி தொகுதியை கேட்டிருக்கிறார். ஆனால் தினகரனோ அவரை தென்சென்னையில் வற்புறுத்தி நிற்க வைத்துள்ளார். மேலும் தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைமை அலுவலகம் இருக்குமிடம் இசக்கி சுப்பையாவிற்குச் சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்தல் தோல்விக்குப் பிறகு கடும் மனஉளைச்சலில் இருந்த இசக்கி சுப்பையா, கடந்த மாதமே குற்றாலத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை ஈடுபட்டிருந்தார். தற்போது அவர், மீண்டும் பல்வேறு பிரமுகர்களுடன் பேசி வருவதாக தெரிகிறது.

இசக்கி  சுப்பையாவை மீண்டும் அதிமுக பக்கம் இழுப்பதற்கு  ஒரு புறம் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும் போதே அவரை, திமுகவுக்கு கொண்டு செல்ல தங்க தமிழ்ச்செல்வன் பேசி வருகிறார்.

ஒருவேளை இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி விட்டால் அக்கட்சியின் தலைமை அலுவலகம் அதே இடத்தில் இயங்குமா அல்லது புதிதாக வேறு ஒரு இடத்திற்கு மாற்றப்படுமா என்ற விவாதமும் அக்கட்சி நிர்வாகிகள் இடையே இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

click me!