ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்படுகின்றன. முதல் கட்டமாக தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த தபால் வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடத்திற்கு எடுத்து வரப்பட்டன.
காலை 7.50 மணிக்கு வேட்பாளர்கள், முகவர்கள், தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்கு பெட்டி பிரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் வாக்குகளில் தொடக்கம் முதலே திமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இளங்கோவன் 3812 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 1400 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 180 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் 60 வாக்குகளும் பெற்றுள்ளனர்.