கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக மாநாடு இபிஎஸ் அழைப்பு
அதிமுக மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாக தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையிலும்; கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திலும், கழக மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து,
குடும்ப நலனே குறிக்கோள்
கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் கம்பிரமாகக் காட்சி அளிப்பதைக் கண்டும்; ஆங்காங்கே துண்டுப் பிரகரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதைக் கண்டும், உள்ளபடியே நாள் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்திவருபவர்களுக்கு மத்தியில், இருந்தாலும், இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், “எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காகத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்" என்று விர முழக்கமிட்டார்கள்.
மீண்டும் ஆட்சியில் அதிமுக
கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு நான் பணியாற்றி வருகிறேன். பல்வேறு மாவட்டங்களுக்கு கழகப் பணிகள் நிமித்தமாக நான் செல்லும்போது, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது.
நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்த இபிஎஸ்
இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவில் பணியாற்றி வரும் அனைத்து கழக நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும்; அதேபோல், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறேன்.
திமுக ஆட்சியால் மக்கள் பாதிப்பு
மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு இடங்களில் இருந்தும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஏதுவாக, தேவையான வாகனங்களை முன்கூட்டியே பதிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகாத வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போதைய விடியா திமுக ஆட்சியின் திறமை இன்மையால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதை நாம் அனைவரும் கண்கூடாகப் பார்க்கிறோம். இதற்கெல்லாம் விரைவில் விடிவு காலம் பிறக்க வேண்டும் என்றால் அது,
மதுரை மாநாட்டிற்கு வருக
தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருக்கும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே முடியும். ஆகவே, "மதுரை, வலையங்குளம் ரிங்ரோடு, கருப்பசாமி கோயில் எதிரில்", வருகின்ற 20.08.2023 ஞாயிற்றுக் கிழமை காலை தொடங்கி நடைபெற உள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு, ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில், என்னுடைய வேண்டுகோளை ஏற்று கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் திரளாக வருகை தந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு அழைப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்