தமிழ்நாடு முதலமைச்சர் பெங்களூர் செல்லும் போது அவருக்கு எதிராக பாஜகவினர் கருப்பு உடை அணிந்து போராட்டம் நடத்த இருப்பதாக தெரிவித்த அண்ணாமலை, நானும் அன்றைய தினம் கருப்பு சட்டை அணிவேன் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் செல்லும் ஸ்டாலின்
காவிரிக்கு குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு பல ஆண்டு காலமாக திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காத நிலை உருவாகும் என அச்சம் தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் அரசு மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன. இந்தநிலையில் தமிழக பாஜகவும் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
ஸ்டாலினுக்கு எதிராக போராட்டம்
அதன் படி தமிழகத்திற்கு எதிராக செயல்படும் கர்நாடக காங்கிரஸ்க்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வருகிற 17 மற்றும் 18 ஆம் தேதி பெங்களூரில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் 24 அரசியல் கட்சிகள் பங்குபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பங்கேற்க கூடாது என தமிழக பாஜக வலியுறுத்தி வருகிறது. மீறி கலந்து கொண்டால் முதலமைச்சரை தமிழகத்திற்குள் விட மாட்டோம் என எச்சரித்திருந்தது. இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பெங்களுர் செல்லும் போது அவருக்கு பாஜக தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என கூறினார். மேலும் கருப்பு பலூன் பறக்க விடப்படும் எனவும், அன்றைய தினம் நானும் கருப்பு சட்டை அணிய இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கருப்பு சட்டை போராட்டம்
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் போதை ஒழிப்பு குறித்த வெள்ளை அறிக்கையை வழங்க முதல்வரிடம் நேரம் கேட்டுள்ளோம். நாளை மாலைக்குள் முதல்வர் நேரம் வழங்க வில்லை என்றால் நாளை மறுநாள் மக்கள் மன்றத்தில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறினார். 75 சதவீதம் மது கடைகளை மூடினால் 33-39 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படும். அதனை சரிசெய்யும் அறிவுரையும் வழங்கி உள்ளதாக தெரிவித்தார். 380 பக்கம் கொண்ட வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ளதாகவும் கூறினார். தமிழகத்தில் உள்ள முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் டாஸ்மாக் குறித்த பல்வேறு தகவல்களை வழங்கியுள்ளனர் அவர்களின் பெயரை குறிப்பிடாமல் தகவலை மட்டும் வெளியிட உள்ளோம்.