அதிமுக பொதுச்செயலாளர் மூடில் இபிஎஸ்.. கொடநாடு கொலை, கொள்ளை அஸ்திரத்தை ஏவும் ஓபிஎஸ் தரப்பு.. அடுத்து என்ன?

By Asianet TamilFirst Published Jul 6, 2022, 7:34 AM IST
Highlights

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்படுவது என்று உறுதி என்று இபிஎஸ் தரப்பு உறுதிப்பட பேசி வரும் நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை ஓபிஎஸ் தரப்பு கையில் எடுத்திருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஓ. பன்னீர்செல்வத்துக்கு இடையே ஏற்பட்ட மோதல் விவகாரம் கிளைமாக்ஸை நெருங்கிக்கொண்டிருக்கிறது. ஜூலை 11 அன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கான பணிகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எடப்பாடி பழனிச்சாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்க அதிமுக நிர்வாகிகள் ஓரணியில் திரண்டு நிற்க, அதைத் தடுக்கும் முயற்சியாக ஓ. பன்னீர்செல்வம் சகல அஸ்திரங்களையும் ஏவி வருகிறார். அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள். மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என இவற்றில் எதிலும் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு பெரிதாக இல்லை என்பதால் தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என்று சட்டப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: அதிமுக செயல்பாடுகளை முடக்க ஓ.பன்னீர்செல்வம் முயற்சி... எடப்பாடி பழனிசாமி புதிய மனு!!

ஆனால், கட்சி நிர்வாகிகள் இபிஎஸ் பக்கம் இருந்தாலும், தொண்டர்கள் ஓபிஎஸ் பக்கம்தான் என்று ஒபிஎஸ் தரப்பினர் கூறி வருகிறார்கள். அந்தத் தொண்டர்களை முழுமையாகத் தங்கள் வழிக்குக் கொண்டு வர ஓபிஎஸ் தரப்பு கடைசி அஸ்திரமாகக் கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களை கையில் எடுத்துள்ளது. இந்த விவகாரம் குறிப்பிட்ட சிலருக்கு எதிரானதாக இருக்கக்கூடும் என்ற எண்ணத்தில் இந்த வழியை ஓபிஎஸ் தரப்பு தேர்ந்தெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் மறு விசாரணை தொடங்கிய பிறகு அரசியல் பூகம்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த வழக்கு மெதுவாகத்தான் நகர்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால், அந்த வழக்கை விரைவுப்படுத்துவதன் மூலம் தங்களுக்கு ஏதேனும் ஆதாயமாக அமையுமா என்ற கோணத்தில் ஓபிஎஸ் தரப்பு தற்போது நினைப்பதாகத் தெரிகிறது. ‘நமது எம்.ஜி.ஆர்’, ‘நமது அம்மா’ என அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ்களுக்கு எல்லாம் ஆசிரியராக இருந்த மருது அழகுராஜ், சில தினங்களுக்கு முன்பு நமது அம்மா நிறுவனர் பதவியிலிருந்து ஓபிஎஸ்ஸை இபிஎஸ் தரப்பு நீக்கிய பிறகு, அதன் ஆசிரியர் பணியிலிருந்து விலகி ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். மேலும், ‘கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளை தமிழக முதல்வர் விரைந்து கைது செய்ய வேண்டும்’ என்றும் அழகு மருதுராஜ் கொளுத்திப் போட்டார். இதுதொடர்பாக கவிதை ஒன்றையும் ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தார்.

இதையும் படிங்க: என் தெய்வம் குடியிருந்த வீட்டில் கொலை..! குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.. திடீரென விழித்தெழுந்த ஓபிஎஸ் மகன்

இந்நிலையில் கொடநாடு கொலை, சம்பவம் தொடர்பாக ஓபிஎஸ்ஸின் இளைய மகன் ஜெய பிரதீப்பும் தன்னுடைய சமூக ஊடகப் பக்கங்கள் வழியாகப் பேசத் தொடங்கியிருக்கிறார். இதுதொடர்பாக ஜெய பிரதீப் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “எங்களது தெய்வம் குடியிருந்த கோயிலான  பங்களாவில் சம்பவம் நடந்த  ஆண்டு அதிமுக ஆட்சி புரிந்து கொண்டிருந்தது மூன்று ஆண்டுகள் நல்லதொரு தீர்ப்பு வரும் என்று பொறுமையாக காத்துக் கொண்டிருந்தேன் . அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பொழுது அடுத்த அரசாங்கம் இந்த வழக்கை விரைவாக முடித்து தீர்ப்பு வழங்குவார்கள் என்று அமைதியாக காத்துக் கொண்டிருந்தேன்.” என்று தெரிவித்திருக்கிறார். ஒற்றைத் தலைமை விவகாரம் எழுந்த பிறகு ஓபிஎஸ்ஸின் மகன் இதுதொடர்பாக பேசும் நிலையில், ‘இதில் எந்த உள் நோக்கமும் இல்லை’ என்றும் ஜெய பிரதீப் விளக்கம் அளித்திருக்கிறார்.

கொடநாடு விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் எதுவும் பேசாமல் இருந்தாலும், அவருடைய மகன் ஜெய பிரதீப், அழகு மருதுராஜ் போன்றோர் பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சியில் வட்டம் தொடங்கி மாநில நிர்வாகிகள் வரை பெரும்பாலானோர் இபிஎஸ் பக்கம் சாய்ந்திருக்கும் சூழலில், தொண்டர்களை தங்கம் பக்கம் இழுக்க கொடநாடு அஸ்திரத்தை ஓபிஎஸ் தரப்பு ஏவ முயற்சிக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. ஆனால், கொடநாடு கொலை கொள்ளை நடந்த பிறகு இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்துவிட்டு, தற்போது ஒபிஎஸ் தரப்பு இதைப் பேசத் தொடங்கியிருப்பதன் மூலம், தங்கள் சுய லாபத்துக்காக இதைப் பேசுகிறார்களா என்ற எண்ணம் தொண்டர்கள் மத்தியில் எழவும் செய்யலாம். என்றாலும். இதாவது ஓபிஎஸ்ஸுக்கு கைகொடுக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

 

இதையும் படிங்க: பாஜக முக்கியத்துவம் கொடுப்பது ஓபிஎஸ்க்கா..? இபிஎஸ்க்கா..?மாநில செயலாளர் பேச்சால் பரபரப்பு

click me!