எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை சட்டம் அமல்
மத்திய பாஜக அரசால் 2019ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சிஏஏ சட்டத்திற்கு அப்போது பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்தது. இந்தநிலையில் நேற்று முதல் நாடு முழுவதும் இந்திய குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு தற்போது அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுத்தேர்தல் அறிவிக்கை வெளியாகும் சூழலில், மத்தியில் ஆளும் பாஜக அரசு, சிஏஏ சட்டம் 2019 (குடியுரிமை திருத்தச் சட்டம்) இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
மாபெரும் வரலாற்று பிழை
இந்த சட்டத்தால் நாட்டில் உள்ள பூர்வகுடி மக்களாக உள்ள எந்த சமூகத்துக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது என்றே அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதன் காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக இந்த சட்டம் அம்லபடுத்தப்படாமல் இருந்த நிலையில், எதிர்வரும் தேர்தலை கருத்தில்கொண்டு மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில், தேர்தல் ஆதாயத்துக்காக சிஏஏ சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மக்களை பிளவுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மத்திய அரசின் இந்த நடவடிக்கையை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. இதன் மூலம் மாபெரும் வரலாற்று பிழையை மத்திய அரசு செய்துள்ளது.
நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுக போராடும்
அகதிகளுக்கு குடியுரிமை அளிக்கும் சட்டம் என்கிற பெயரில் கொண்டுவரப்பட்ட இந்த சிஏஏ திருத்தச் சட்டத்தை பூர்வ குடிமக்களான இஸ்லாமியர்களுக்கு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக அமல்படுத்த நினைத்தால் அதிமுக அதனை ஒருபோதும் அனுமதிக்காது. இதற்கெதிராக நாட்டு மக்களுடன் இணைந்து அதிமுகவும் ஜனநாயக ரீதியாக போராடும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இதையும் படியுங்கள்
பிளவுவாத அரசியலை முன்னிறுத்துவதா..? பாஜக அரசுக்கு எதிராக முதல் குரல் கொடுத்த விஜய்