போராட்டத்தில் ஈடுப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.
ஆசிரியர்கள் போராட்டம்
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்திய ஆசிரியர்களிடம் தமிழக அரசு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து ஒரு சில அறிவிப்புகளையும் அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். ஆனால் தமிழக அரசு தங்களுடைய முழுமையான கோரிக்கையை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கை விடுவோம் என அறிவித்தனர். இதனையடுத்து இன்று காலை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பேச்சுவார்த்தை தோல்வி
இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சியாக இருக்கும்பொழுது ஒரு பேச்சு, ஆளும் கட்சியான பிறகு மற்றொரு பேச்சு என்ற கொள்கையை கொண்டிருப்பதாகவும் விமர்சித்துள்ளார். 2021ம் ஆண்டு தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது திமுக வெளியிட்ட 311-வது மற்றும் 181 ஆம் வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி கடந்த 9 நாட்களாக அமைதியான ஜனநாயக முறையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம் மற்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராடி வருகின்றனர்,
உடனடியாக விடுதலை செய்திடுக
அவர்கள் வைத்த நியாயமான கோரிக்கையை கூட முழுமையாக பரிசீலிக்காமல் வலுக்கட்டாயமாக குடும்பத்தோடும் குழந்தைகளோடும் கைதுசெய்ததையும், அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் ஆசிரியர் குடும்பங்களை அடைத்து வைத்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், ஆசிரியர்களுக்கு தாங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்
டிபிஐ வளாகத்தில் குவிந்த போலீஸ்.. காலையிலேயே போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் கைது!