ஆட்டைக் கடித்து, மாட்டை கடித்து நம்மையும் கடித்துவிட்டார். தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை என அதிமுக மூத்த நிர்வாகி நத்தம் விஸ்வதநாதன் விமர்சித்துள்ளார்.
அதிமுக- பாஜக கூட்டணி முறிவு
தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி கடந்த 4 வருடமாக தொடர்ந்த நிலையில் தற்போது கூட்டணி முறிந்துள்ளது. இதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடு தான் காரணம் என அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இதனையடுத்து இரு தரப்புக்கும் இடையே மீண்டும் சமரச பேச்சு நடத்த பாஜக மேலிடம் முயற்சி மேற்கொண்டது. ஆனால் தங்களது முடிவில் இருந்து பின் வாங்கப் போவதில்லையென உறுதியாக எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்தநிலையில், பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான நத்தம் விஸ்வதநாதன் கூறுகையில், 2 ஆண்டுகள் கூட அரசியலில் அனுபவம் இல்லாத கத்துக்குட்டியான அண்ணாமலை கூட்டணி கட்சி என்று கூட பாராமல் அண்ணா மற்றும் ஜெயலலிதாவை போன்ற தலைவர்களை தொடர்ந்து விமர்சித்தார்.
பக்குவம் இல்லாத அரசியல்வாதி
தன்னை தானே விளம்பரப்படுத்தும் ஒரு முதிர்ச்சியற்ற ஒரு பக்குவம் இல்லாத அரசியல்வாதி தான் அண்ணாமலை செயல்படுகிறார். அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்தது. அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக்கப்பட்டதால் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். பாஜக அதிமுகவோடு இருந்ததால் காலில் ஒரு கட்டையைக் கட்டிக் கொண்டு ரேசில் ஓடியது போன்று இருந்தது. அதிமுக வெற்றிக்கு இடையூறாக இருந்த பாஜக என்ற தடை நீக்கப்பட்டது. பாஜகவின் கொள்கைகள் மீது அதிமுகவுக்கு எப்போதும் உடன்பாடு இல்லை அதிமுகவின் தயவு இல்லாமல் பாஜகவால் வெல்ல முடியாது. தமிழகத்தில் பாஜக எந்த இடத்திலும் டெபாசிட் வாங்காது.
கூட்டணியில் இருந்து கொண்டு ஜெயலலிதாவை விமர்சனம் செய்து கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறிவிட்டார். கண்டன தீர்மானம் நிறைவேற்றியும் அண்ணாமலை திருந்தாமல் அண்ணாவை விமர்சனம் செய்திருக்கிறார். அண்ணாமலைக்கு இது போன்ற தைரியம் கொடுத்தது யார். நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அண்ணாமலை. ரவுடிகள், கட்டப் பஞ்சாயத்து செய்பவர்கள், கந்துவட்டிக்காரர்கள் தான் பாஜகவில் அதிகளவில் உள்ளனர் என நத்தம் விஸ்வநாதன் ஆவேசமாக விமர்சித்து பேசினார்.
இதையும் படியுங்கள்