பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வருகிற 5 ஆம் தேதி மீண்டும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் மதுரையில் பிரம்மாண்டமான மாநாடு நடத்த ஆயத்தமாகி வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றபடவுள்ள தீர்மானங்கள், முக்கிய முடிவுகள் தொடர்பாக அவ்வப்போது ஆலோசனை கூட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் கடந்த 13 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரபை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அதிமுக மாநாட்டு பணிகள் தொடர்பாக முக்கியமாக ஆலோசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து வருகிற ஜூலை 5 ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 5.7.2023 - புதன் கிழமை காலை 9 மணிக்கு, தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச்செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்வதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்