பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றி 8 மாசம் ஆச்சு!அபராதத்தோடு தள்ளுபடி பண்ணுங்க-ஓபிஎஸ்க்கு செக் வைக்கும் இபிஎஸ்

By Ajmal KhanFirst Published Mar 16, 2023, 12:48 PM IST
Highlights

பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு  வந்து 8 மாதங்களுக்கு பின் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்துள்ள  வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக அதிகார மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் இடையே பிளவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் தீர்மனங்கள் நிறைவேற்றப்பட்டது. உச்சநீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என அறிவித்த நிலையில் ஜூலை 11 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

இபிஎஸ் உருவப்படம் எரித்த நிர்வாகி.! இரவில் நீக்கம்..! அதிகாலையில் மீண்டும் சேர்ப்பு- பாஜகவில் நடப்பது என்ன.?

தீர்மானத்திற்கு எதிராக மனு

இந்தநிலையில் இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில், கட்சியை தற்போது இடைக்கால பொதுச்செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என, இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.  இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது அதிமுகவின் உறுப்பினரே அல்ல என்றும் இபிஎஸ் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

கேள்வி எழுப்ப முடியாது

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அதன்படி, தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் பதிவு செய்து கொண்டதாக பதில் மனுவில் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் தனக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும், அதே அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது எனவும், கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தள்ளுபடி செய்யுங்கள்

கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில்,  கட்சியில் இருந்து தன்னை நீக்க அவர்களுக்கு தான் அதிகாரம் உள்ளது என கூற முடியாது எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது என்றும், பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு  வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது என்பதால் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது நாளை மீண்டும் நடைபெறவுள்ளது. 

இதையும் படியுங்கள்

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசா? நோபல் குழு துணை தலைவரின் தகவலால் பரபரப்பு- உற்சாகத்தில் பாஜக

click me!