இது விடியலாட்சி அல்ல - விடியாத ஆட்சி: புள்ளிவிபரங்களுடன் ஸ்டாலினை வம்பிழுக்கும் எடப்பாடி..!

By Ganesh RamachandranFirst Published Jan 18, 2022, 4:24 PM IST
Highlights

வெறும் எட்டே மாதங்களில் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் லாக்-அப் மரணங்களும், போலீஸ் மர்ம சாவுகளும் நிகழ்ந்தபடியுள்ளன. இதுதான் நீங்கள் தருவதாக சொன்ன விடியல் ஆட்சியா?

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காவல்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அப்பா மற்றும் மகன் இருவரும் மிக மோசமான போலீஸ்தாக்குதலுக்கு உள்ளானதால் இறந்தனர். தேசம் முழுக்க பரபரப்பை உருவாக்கிய இந்த லாக்-அப் மரணத்துக்கு எதிராக அப்போதைய தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க. கொதித்து எழுந்தது. இதைத்தொடர்ந்து அப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு.க., நடவடிக்கை எடுத்து, அந்த சம்பவத்தில் தொடர்புடைய அத்தனை போலீஸ்காரர்களையும் கைது செய்து, சிறையிலடைத்தது.

ஆனாலும் அ.தி.மு.க. அரசில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுவிட்டது! என்று சொல்லி தி.மு.க. தொடர் போராட்டங்களை நடத்தியது. இது மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கியது.

கடந்த சட்டமன்ற தேர்தலின் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் உருவாகி, கடந்த எட்டு மாத காலமாக தி.மு.க. ஆண்டு கொண்டிருக்கும் நிலையில், ‘விடியா தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்ததை கண்டு, மக்கள் கொதிப்படைந்து உள்ளனர்.’ என்று ஸ்டாலின் அரசு மீது கடும் சாடலை சுமத்தி, ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடியார். அதில்….

  • மதுரையில் உறவினர்களுடன் வந்த இளம் பெண்ணை மிரட்டி, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
  • கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் பெண் காவலர் ஒருவர், உடன் பணிபுரியும் காவலர் மீது புகார் கூறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
  • விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் போலீஸார் தாக்கியதால் வியாபாரி உலகநாதன் இறந்துவிட்டதாக  புகார்.
  • ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே நீர்கோழியேந்தல் கிராமத்தை சேர்ந்த 21 வயதான கல்லூரி மாணவன் மணிகண்டன், போலீஸ் விசாரணைக்குப் பின் வீட்டில் மர்மமான முறையில் இறந்துவிட்டதாக புகார்.
  • திருத்தணியில் பொங்கல் புளியில் பல்லி இறந்து கிடந்ததை தெரிவித்த நந்தன்  மீது வழக்கு. இதை அறிந்த அவர் மகன் பாபு குப்புசாமி தற்கொலை.
  • சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த மாற்றுத் திறனாளி பிரபாகரன், போலீஸ் விசாரணைக்குப் பின் இறந்துள்ளார்.

இப்படி வெறும் எட்டே மாதங்களில் தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் லாக்-அப் மரணங்களும், போலீஸ் மர்ம சாவுகளும் நிகழ்ந்தபடியுள்ளன. இதுதான் நீங்கள் தருவதாக சொன்ன விடியல் ஆட்சியா? இல்லையில்லை இது விடியவே விடியாத ஆட்சி! என்று போட்டுத் தாக்கியுள்ளார்.

இதற்கு ஆளும் தி.மு.க.வின் ரியாக்‌ஷன் எப்படி இருக்கப்போகிறதோ!?

click me!