A to Z ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்குங்கள்... திட்டக்குழுவுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!!

By Narendran SFirst Published Jan 18, 2022, 4:05 PM IST
Highlights

ஒரு ஆலோசனையை சொல்லும்போது அதன் A to Z வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து வழங்க வேண்டும் என்று திட்டகுழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 

ஒரு ஆலோசனையை சொல்லும்போது அதன் A to Z வரை அனைத்தையும் அலசி ஆராய்ந்து வழங்க வேண்டும் என்று திட்டகுழுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வரும், தமிழக மாநிலத் திட்டக் குழுத் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை, சேப்பாக்கம், எழிலகம், மாநிலத் திட்டக்குழு அலுவலகத்தில் துறை சார்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆயவின்போது, மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ.ஜெயரஞ்சன், குழுவின் செயல்பாடுகள், புதிய கொள்கைகள், தமிழக புத்தாக்கத் திட்டங்கள், மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டங்கள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட துறைவாரியான ஆய்வுகள், கள ஆய்வுகள் மற்றும் அரசு துறை செயலாக்க ஆலோசனைகளைப் பற்றி விளக்கினார். அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், புதிய அரசு பொறுப்பேற்றதும் மாநில திட்டக் குழுவை புதிதாக அமைத்தோம். பேராசிரியர் ஜெயரஞ்சன் உள்ளிட்ட பல்துறையைச் சேர்ந்தவர்கள் இக்குழுவில் இடம்பெற்றீர்கள். உங்கள் அனைவரது பணியும் கடந்த ஆறு மாத காலமாக ஆக்கபூர்வமாக அமைந்து வருவதை எண்ணி உண்மையில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் அலுவலகத்தோடும், அமைச்சர்களோடும், அரசுச் செயலாளர்களோடும், நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறீர்கள். அவர்களுக்கு ஆக்கபூர்வமான பல ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் நீங்கள் வழங்கி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். இதே உற்சாகத்தோடு நீங்கள் அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். உங்களது பணி என்பது மிகமிக முக்கியமானது. நீங்கள் வழிகாட்டும் இடத்தில் இருக்கிறீர்கள். கைகாட்டியாக, கலங்கரை விளக்கமாக இருக்கிறீர்கள். எனவே தான் உங்கள் பணியை மிக மிக முக்கியமானது என்று சொன்னேன். உங்களிடம் இருந்தும் இன்னும் கூடுதலாக பல்வேறு வழிகாட்டுதல்கள் எங்களுக்கு வேண்டும் என்பதைச் சொல்வதற்காகத்தான் நான் இங்கு வந்துள்ளேன். மாநில வளர்ச்சிக் கொள்கைக் குழுவைச் சார்ந்த நீங்கள் அரசுக்கு பல்வேறு ஆலோசனைகளைச் சொல்கிறீர்கள். இது போன்று செய்யலாம், அது போல திட்டமிடலாம் என்று உங்களிடம் இருந்து ஆலோசனைகள் எங்களுக்கு வருகின்றன. உங்களிடம் இருந்து வரும் எண்ணங்கள், ஆலோசனைகளாக மட்டுமில்லாமல், அந்த எண்ணம் குறித்த முழுமையான செயல் வடிவமாக எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். புதிய புதிய எண்ணங்கள் உங்களுக்குத் தோன்றலாம்.

அந்த எண்ணம் குறித்து அது பற்றிய வல்லுநர் குழுவுடன் நீங்களே ஆலோசனை நடத்தலாம். குறிப்பிட்ட தொழிற்சாலைகளுக்கு நீங்களே போய் பார்க்கலாம். அதன் நீள அகலங்கள் அனைத்தையும் நீங்களே தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு அவற்றை மேம்படுத்த அதனை அரசுக்கு உங்களது திட்ட அறிக்கையாக நீங்கள் வழங்கலாம். அதாவது ஒரு ஆலோசனையை நீங்கள் சொல்லும்போது அதன் A to Z வரை அனைத்தையும் நீங்களே அலசி ஆராய்ந்து எங்களுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அதற்கு துறை வாரியான வல்லுநர்களை நீங்கள் சந்திக்கலாம். கலந்துரையாடல் நடத்தலாம். வெளிமாவட்டங்களுக்குச் சென்று நீங்களே விவசாயிகளை, தொழிலதிபர்களை, இளைஞர்களை சந்திக்கலாம். அவர்களது ஆலோசனையையும் பெறலாம். இவ்வாறான செயல்முறைத் திட்டங்களோடு நீங்கள் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மிக முக்கியமான ஆலோசனையாக இருந்தால் அது குறித்த முழுமையான பரிசீலனைக்குப் பிறகு நீங்கள் அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். தமிழகம் பல்வேறு வகைகளில் முன்னேறிய மாநிலமாக திகழ்கிறது. அது நமக்கு பெருமை தருவதாகும். வளர்ச்சித் திட்டங்களையும் சமூக சீர்திருத்தத்தையும் இணைத்ததால் நம் மாநிலம் அடைந்த மாபெரும் பலன் அது என்று தெரிவித்தார்.

click me!