உளவுத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அடிபணிவதால், தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூக விரோதிகளின் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து, உண்மைத் தகவல்கள் அரசுக்கு வருவதில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு
தமிழக சட்டம் ஒழுங்கு தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உளவுத் துறை கடந்த 28 மாத திமுக ஆட்சியில், முற்றிலும் செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளது. முன்விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, பழிக்குப் பழி தாக்குதலில் ஈடுபடும் ரவுடிகளின் அராஜகங்கள் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில், பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது மகனும், விளையாட்டுத் துறை மந்திரியுமான உதயநிதியும், மக்களிடம் ஏதேதோ பேசி, அவர்களைக் குழப்பி திசை திருப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி காலங்களில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், வரும் முன் நடவடிக்கை எடுப்பதிலும் சுதந்திரமாக செயல்பட்டு வந்த காவல் துறை, விடியா திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 28 மாத காலத்தில், தனது சுய முகவரியை இழந்து, ஆளும் கட்சியின் கைப் பாவையாக மாறி, தமிழகத்தில் தற்போது நிகழும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு நிகழ்வுகளை முன்னதாகவே அறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், வேடிக்கை பார்த்து வரும் நிலை மிகவும் வெட்கக்கேடானது. அம்மாவின் ஆட்சியில், அண்டை நாடான இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ உள்ளதை முன்னதாகவே கண்டறிந்து, மத்திய அரசு மூலம் இலங்கைக்கு அறிவுரை வழங்கிய தமிழக நுண்ணறிவுப் பிரிவு,
தினசரி நடைபெறும் கொலைகள்
விடியா திமுக ஆட்சியில் கோவை கார் குண்டு வெடிப்பு; கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம்; இந்த ஆண்டு மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் உயிர்பலி; சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளச் சாராய சாவு; துப்பாக்கி கலாச்சாரம்; தினசரி கொலைகள் என்று, விடியா திமுக அரசின் காவல் துறை சறுக்கிய நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். விடியா திமுக ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அடிபணிவதால், தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூக விரோதிகளின் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து, உண்மைத் தகவல்கள் அரசுக்கு வருவதில்லை என்ற செய்திகள் தெரிய வருகின்றன.
கைகட்டி வேடிக்கை பார்க்கும் முதல்வர்
மேலும், விடியா திமுக அரசின் காவல் துறை, சட்டம்-ஒழுங்கை பேணுவதை விட்டுவிட்டு, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரிப்பது எப்படி என்பதிலும், விடியா திமுக அரசை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் புனைவதிலும் மட்டுமே ஈடுபட்டு வருவது மிகுந்த வெட்கக்கேடானது. பலமுறை நான் அறிக்கைகள், பேட்டிகள் வாயிலாக, அம்மாவின் ஆட்சியில் ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையாக செயல்பட்டு வந்த தமிழகக் காவல் துறை, இந்த விடியா திமுக ஆட்சியில், தனது சுய முகவரியை தொலைத்த நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தேன்.
சென்ற வாரம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை வெறிக் கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர்களை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. அதே போல், சென்னை பட்டினப்பாக்கத்தில் பட்டப் பகலில் ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோவில் சென்ற சுரேஷ் என்பவரை ரவுடி கும்பல் ஒன்று வெடிகுண்டுகள் வீசி, வெட்டிக் கொன்றுவிட்டு தப்பி ஓடி உள்ளது. இப்படி, மாநிலம் முழுவதும் சமூக விரோதிகளின் கொட்டம் அதிகரித்துள்ளது. ஆனால், காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்.
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி
விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. 1.9.2023 முதல் 12.9.023 வரை மட்டும், தமிழகத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. சென்னை பனையூர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கார் பரிசு பெற்ற இசைப்புயல் திரு. ஏ.ஆர் ரஹ்மான் அவர்களுடைய இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது. நிகழ்ச்சி நடத்த அனுமதி அளித்த காவல் துறை, போக்குவரத்து நெரிசலை சீர்செய்தல் குறித்தும், வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் குறித்தும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுடன் பேசி, சரியாக முன் திட்டமிடாத காரணத்தினால்,
திமுக அரசின் தோல்வி
கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதலமைச்சரின் வாகன அணி வகுப்பும், போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டது. இது, விடியா திமுக அரசின் காவல் துறையினுடைய தோல்வியைக் காட்டுகிறது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக் காலங்களில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது போல், இனியாவது தமிழகக் காவல் துறை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து, சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டும் என்றும், தமிழக மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும், காவல் துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதலமைச்சரை வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
போலீசார் என்னை கைது செய்யாததால் தான் ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றினாங்க..! பரபரப்பை கிளப்பிய அண்ணாமலை