பாஜக போராட்டத்தின் போது தன்னை கைது செய்யாததால் தான் 3 ஐபிஎஸ் அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக போராட்டத்தால் பொதுமக்கள் பாதிப்பு
சனாதான ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும் இந்து அறநிலைய சட்டங்களை மீறிய இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர் பாபுவை பதவி விலக வேண்டும் எனவும் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் வள்ளுவர் கோட்டம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
இதனையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 800 நபர்கள் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சட்டவிரோதமாக கூடுதல், முறையற்று தடுத்தல், பொதுத் தொல்லை தருதல் உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்தனர். இந்தநிலையில் நேற்று தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்ட உத்தரவில், பெருநகர சென்னை கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டல், கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி
இது போல தாம்பரம் காவல் ஆணையரகத்தின் பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை ஆணையரான ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது. ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் ஏ ஆர் ரகுமார் இசை நிகழ்ச்சியில் மக்கள் கூட்டத்தை அதிகளவு வரும் என்பதை திட்டமிடாமல் பொதுக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎஸ் அதிகாரி தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதே போல ஐபிஎஸ் அதிகாரி திஷா மிட்டலும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இதற்கு பாஜக போராட்டத்தில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
கைது செய்யாததால் ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறுகையில், சென்னையில் அமைச்சர் சேகர்பாபு பதவி விலகக்கோரி பாஜக நடத்திய முற்றுகைப் போராட்டத்தில் என்னைக் கைது செய்யாததற்காக 3 ஐபிஎஸ் அதிகாரிகளை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியுள்ளனர். என் மீதும், பாஜக மீதும் குற்றம்சாட்டும் முன்பு முதல்வர் ஒருமுறை கண்ணாடியில் பார்க்க வேண்டும். ஒரே ஒரு குடும்பத்துக்காக முதல்வர் உழைத்து வருகிறார். மகனும், மருமகனும் சம்பாதிப்பதற்காக ஆட்சி நடக்கிறது என விமர்சித்தார்.