
ஆட்சியை அவதூறாக பேசி வரும் டிடிவி தினகரன் மீது புதிதாக வழக்கு பதிய வேண்டியதில்லை என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து தினகரன் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்றும் மைத்ரேயன் எம்.பி. கூறியுள்ளார்.
அதிமுக இரண்டாக பிரிந்ததையடுத்து ஓ.பன்னீர் செல்வமும் சசிகலா தரப்பும் தங்களுக்கே இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியது.
இதனால் குழப்பமடைந்த தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது. இதையடுத்து இருதரப்பும் பிரமாண பத்திரங்களை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்தது.
எடப்பாடி தரப்பும் ஒபிஎஸ் தரப்பும் ஒன்றாக இணைந்தாலும் டிடிவி தரப்பு தனியாக செயல்பட்டு வருகிறது. மேலும் கட்சி எங்களுக்கே சொந்தம் என கூறி வருகிறது. மேலும் இருதரப்பும் தங்களுக்கே கட்சியும் சின்னமும் தரவேண்டும் என கோரி பிரமாண பத்திரங்களை தாக்கல் செய்து வந்தனர்.
அக்டோபர் 31 ஆம் தேதியிலிருந்து நவம்பர் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், மைத்ரேயன் எம்.பி., செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பெரும்பான்மையாக உள்ள இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். அணிக்குத்தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும் என்று கூறினார்.
மேலும், பேசிய அவர், ஆட்சியை அவதூறாக பேசிவரும் டிடிவி தினகரன் மீது புதிதாக வழக்கு பதிய வேண்டியதில்லை என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளில் இருந்து டிடிவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும் என்றும் மைத்ரேயன் எம்.பி. கூறினார்.