
தர்ம யுத்தம் நடத்தியபோது கூட ஆல் டைம் மீடியா வெளிச்சத்தில் கெத்தாக வலம் வந்த பன்னீர்செல்வம், துணை முதல்வரானாலும் ஆனார் மனிதரை காணவே முடியவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு பத்தரை மணி போல் தமிழக காவல்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் திடீர் பரபரப்பு. அதாவது ‘டெபுடி சி.எம். ஊட்டிக்கு போறார்!’ என்கிற தகவல்தான்.
நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலருக்கும் பன்னீரின் இந்த விசிட் பற்றி எந்த தகவலும் இல்லை. ஆனால் அவர் வருவதை ஸ்மெல் செய்துவிட்டவர்கள் ‘ஏன் இந்த திடீர் வருகை?’ என்று விபரம் தெரியாமல் புலம்ப துவங்கிவிட்டனர்.
ஏற்கனவே எடப்பாடி டீமுக்கும், பன்னீர் டீமுக்கும் இடையில் பெரும் புகைச்சல் நடந்து கொண்டிருக்கிறது என்று ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பதால், நீலகிரி அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் வேறுமாதிரி யோசிக்க துவங்கிவிட்டனர். அதாவது ‘சின்னம்மா கூட பிரச்னையானப்ப அம்மாவோட சமாதியில வந்து தியானம் பண்ணி கட்சியை பிளந்தவர், இப்போ எடப்பாடி கூட பிரச்னையாகி கொடநாடு பங்களா முன்னாடி தியானத்துல உட்கார போறாரா?’ என்று தங்களுக்குள் காமெடி செய்யுமளவுக்கு நிலைமை குழப்பமாய் போனது.
இந்த சூழலில் துணை முதல்வரின் இந்த திடீர் விசிட்டால் மேற்கு மாவட்ட போலீஸ் அலர்ட் ஆகி ஆங்காங்கே பாதுகாப்பை பலப்படுத்தியது. நள்ளிரவில் ஊட்டியிலுள்ள அரசு விருந்தினர் மாளிகை வந்து சேர்ந்தார் பன்னீர்.
அந்த குளிரிலும் அவரை வரவேற்ற லோக்கல் முக்கிய நிர்வாகிகள், அவர் ரிலாக்ஸ்டாக அமர்ந்ததும் ‘அண்ணே! திடீர் விஜயம் பண்ணியிருக்கீங்க சந்தோஷம். ஏதாச்சும் விழா, மேடை ஏற்பாடு பண்ணணுமா?’ என்று தயங்கி கேட்க, அவரோ பெரிதாய் சிரித்தபடி ‘அய்ய, யப்பே அதெல்லாம் இல்லப்பே. நான் என்னோட பேரக்குழந்தைகள பாக்க வந்திருக்கம்பே! இது தனிப்பட்ட விசிட்டுதேம்.’ என்றாராம். அதன் பிறகே அவர்களின் முகத்தில் குழப்ப ரேகை மறைந்ததாம்.
பன்னீரின் பேரக்குழந்தைகள் குட் ஷெப்பர்டு பள்ளியில் படிக்கிறார்கள்! அவர்களை பார்க்கவே பன்னீர் வந்திருக்கிறார்.
அதானே! பெரியகுளத்துல கவர்மெண்டு ஸ்கூலுதானே இருக்குது. பெரிய வீட்டு பேரக்குட்டிக அங்ஙன படிச்சா பெருமையாவா இருக்கும், என்ன சொல்லுதீய!