மிஸ்டுகால் கொடுத்தால் போதும்.. கோயில்களில் இலவசமாக மொட்டை அடிக்க டோக்கன்.. அடிச்சுத் தூக்கும் சேகர்பாபு.!

By Asianet TamilFirst Published Sep 30, 2021, 9:38 PM IST
Highlights

கோயில்களில் செல்போனில் மிஸ்டு கால் கொடுத்தால்போதும் இலவசமாக மொட்டை அடிக்க டோக்கன் கிடைத்துவிடும் என்று தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். 
 

அமைச்சர் சேகர்பாபு திருத்தணியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திருத்தணி கோயிலில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கத்தேர், வெள்ளி தேர் ஓடாமல் இருக்கின்றன. அவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்களில் விரைவில் முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பார். கோயில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். பெண்கள், ஆண்களுக்கென தனித்தனியாக குளியல் அறை ஏற்பாடு செய்யப்படும்.


இதேபோல பக்தர்கள் குளிப்பதற்கு வெந்நீர் வசதியும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. ராஜகோபுரம் கட்டும் பணிகள் நடைபெற்றுவருவதால் 360 படிக்கட்டுக்கள்தான் உள்ளது. இனி 365 படிக்கட்டுக்கள் அமைக்கப்படும். கோயில்களில் இனி காலை உணவாகச் சாப்பாட்டுக்கு பதில் இட்லி, பொங்கல் வழங்கப்படும். மலைக்கோயில் பேருந்து நிலையத்தில் இருக்கை உள்பட அனைத்து வசதிகளும் விரைவில் ஏற்படுத்தப்படும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவுப்படி, வனத்துறையிடம் அனுமதி பெற்று மலைக் கோயிலுக்கு மேலும் பாதைகள் அமைக்கப்படும்.
அறநிலையத்துறையும் பிஎஸ்என்எல் நிர்வாகமும் இணைந்து பக்தர்கள் மொட்டையடிக்க புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது. இத்திட்டத்தின்படி மொட்டையடிக்கும் இடத்தில் மின்னணு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். அதன் அருகே சென்று யாருக்கு மொட்டையடிக்க வேண்டுமோ அவரது முகத்தை ஸ்கேன் செய்துவிட்டு புதிதாக கொடுக்கப்பட்டுள்ள 8939971540  என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இது உடனடியாக ஸ்கேன் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபரின் புகைப்படத்துடன் டோக்கன் அனுப்பும். அந்த டோக்கனை காட்டி பக்தர்கள் இலவசமாக மொட்டை  அடித்துக்கொள்ளலாம்.” என்று சேகர்பாபு தெரிவித்தார். 

click me!