சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், எம்எல்ஏ பதவியை இழந்துள்ளார். இதனையடுத்து 6 மாத காலத்திற்குள் திருக்கோவிலூர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு உருவாகியுள்ளது.
பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை
திமுக ஆட்சி காலமான கடந்த 2006 - 2011 ஆம் ஆண்டுகளில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு எதிராக 2011 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் பொன்முடியை விடுவித்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் மேல் முறையீடு செய்தனர்.
இந்த வழக்கில் பொன்முடிக்கு விடுதலையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் இன்று பொன்முடிக்கான தண்டனையை அறிவித்தது. அதன் படி சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருக்கோவிலூருக்கு எப்போது தேர்தல்
நீதிமன்ற உத்தரவு காரணமாக பொன்முடி அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருக்கான பதவியை இழந்தார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் இருந்து சட்டமன்ற அலுவலகத்திற்கு ஆவணங்கள் அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து அரசிதழில் திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படும். இதனை தொடர்ந்தே தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்த திட்டமிடும். ஒரு தொகுதி காலியானால் அந்த தொகுதியில் 6 மாத காலத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலோடு திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்த வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
வேட்பாளர் யார்.?
அதே நேரத்தில் பொன்முடி சார்பாக உச்சநீதிமன்றத்தில் ஜனவரி 2ஆம் தேதி மேல் முறையீடு செய்யப்படவுள்ளது. இதில் தண்டனை ரத்து செய்வதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. மேலும் தண்டனை காலத்தை வேண்டும் என்றால் குறைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வேளை நாடாளுமன்ற தேர்தலோடு திருக்கோவிலூர் தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றதால் பொன்முடியின் இரண்டாவது மகன் அசோக் சிகாமணிக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்கள்
பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கிடைக்கும்: என்.ஆர்.இளங்கோ நம்பிக்கை!