ரூ.10 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை..! வேட்பாளர்களின் தேர்தல் செலவை செட்டில் செய்யும் தேமுதிக..!

By Selva KathirFirst Published Apr 19, 2021, 10:54 AM IST
Highlights

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்த தொகைக்கான ஆதாரத்தை சமர்பித்து அதற்கு உரிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு அக்கட்சித்தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்த தொகைக்கான ஆதாரத்தை சமர்பித்து அதற்கு உரிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு அக்கட்சித்தலைமை இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக கடைசி நேரத்தில் விலகியது. இதனால் வேறு வழியே இல்லாமல் தினகரனின் அமமுகவுடன் தேமுதிக கூட்டணி வைக்க வேண்டிய நிலை உருவானது. சுமார் 60 தொகுதிகளை தினகரன் தேமுதிகவிற்கு என்று ஒதுக்கினார். இந்த 60 தொகுதிகளில் போட்டியிட வெறும் 10 பேர் மட்டுமே ஆர்வம் காட்டினர். எஞ்சிய 50 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் கிடைக்கவில்லை. இதனால் மாவட்டச் செயலாளர்கள் கண்டிப்பாக தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தேமுதிக தலைமை உத்தரவிட்டது.

ஆனால் தேர்தலில் போட்டியிடுவதற்கு தங்களிடம் செலவு செய்ய பணம் இல்லை என்று மாவட்டச் செயலாளர்கள் கைவிரித்தனர். இதனை அடுத்து தேர்தல் செலவுகளுக்கு தேமுதிக தலைமையிடம் இருந்து கணிசமான அளவில் பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனை அடுத்து 60 தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிகவினர் இடையே ஆர்வம் எழுந்தது. அதன் அடிப்படையில் 60 வேட்பாளர்களை தேமுதிக அறிவித்தது. ஆனால் கூறியபடி தேர்தல் செலவுகளுக்கு தேமுதிக தலைமையால் பணத்தை வேட்பாளர்களிடம் கொடுக்க முடியவில்லை.

இதனை அடுத்து வேட்பாளர்கள் 50 லட்சம் வரை செலவு செய்யலாம் என்றும் அவர்களுக்கு தேர்தல் முடிந்த பிறகு பணம் ரிட்டர்ன் செய்யப்படும் என்று தேமுதிக தலைமையிடம் இருந்து தகவல் சென்றது. இதனை ஒரு சிலர் ஏற்று கடன் வாங்கி எல்லாம் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். ஆனால் வேறு சிலரோ பிரச்சாரத்திற்கு கூட வராமல் வீடுகளில் முடங்கினர். இந்த நிலையில் தேர்தல் முடிந்த பிறகு ஏற்கனவே கூறியபடி செலவு விவரங்களோடு வேட்பாளர்களை கட்சித்தலைமை சென்னை வரவழைத்தது. அதன்படி வந்த வேட்பாளர்கள் கொடுத்த செலவு விவரங்களை கிராஸ் செக் செய்ய பார்த்தசாரதி தலைமையில் ஒருகுழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு தொகுதியில் தேமுதிக வேட்பாளர்கள் செய்த செலவு குறித்து ஆய்வு செய்து பிரேமலதாவிடம்  அறிக்கை கொடுத்துள்ளது. அந்த அறிக்கையின் படி சில தொகுதிகளில் வேட்பாளர்கள் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்தது தெரியவந்தது. இதே போல் ஒரு சில தொகுதிகளில் வேட்பாளர்கள் செலவு எதுவும் செய்யவில்லை. இதனை அடுத்து தொகுதிவாரியாக வேட்பாளர்கள் செய்த செலவுக்கு ஏற்ப ரூபாய் 10 லட்சம் முதல் ரூ50 லட்சம் வரை வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமை கொடுத்துள்ளது. இதில் செலவே செய்யாமல் சிலர் செலவு செய்ததாக கணக்கு கொடுத்து அந்த பணத்தை கொடுக்குமாறு கட்சித் தலைமையை நெருக்கி வருகின்றனர்.

அதற்கு தேமுதிக தலைமை உடன்படாத நிலையில், வேட்பாளர்கள் எரிச்சலில் கட்சியில் இருந்து விலக ஆரம்பித்துள்ளனர். ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் உண்மையில் செலவு செய்தவற்கு செட்டில் செய்யும் பணி தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஜரூராக நடைபெற்று வருகிறது.

click me!