தேர்தல் செலவு..! நிர்வாகிகளுக்கு பிரேமலதா கொடுத்த நம்பிக்கை..! தெம்பாக களம் இறங்கும் தேமுதிக..!

By Selva KathirFirst Published Sep 16, 2021, 10:58 AM IST
Highlights

கொடுத்த வாக்குறுதியின் படி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமையிடம் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தலுக்கு பிறகே திமுகவுடன் தேமுதிக இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. தற்போது வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக தரப்பில் இருந்து யாரும் விமர்சிக்கவில்லை. 

கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களை போல் அல்லாமல் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டி என்று அறிவித்துவிட்டு தேமுதிக தேர்தல் பணிகளை துவங்கியிருப்பது துவண்டு போயிருந்த அந்த கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி நடத்தியே நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல்களின் போது தேமுதிக தனது பெயரை கெடுத்துக் கொண்டது. வேறு வழியே இல்லாமல் தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு படு தோல்வியையும் தேமுதிக சந்தித்தது. அப்போது கட்சி சார்பில் போட்டியிட வேட்பாளர்களை தேடிப்பிடிக்கும் நிலைமை தேமுதிக தலைமைக்கு ஏற்பட்டது. இதனை அடுத்து வேட்பாளர்களுக்கு செலவுத் தொகை வழங்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து பலர் ஆர்வத்துடன் முன்வந்தனர்.

கொடுத்த வாக்குறுதியின் படி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமையிடம் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது. இந்த நிலையில் தான் ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியானது. தேர்தலுக்கு பிறகே திமுகவுடன் தேமுதிக இணக்கமான உறவை கடைபிடித்து வருகிறது. தற்போது வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக தரப்பில் இருந்து யாரும் விமர்சிக்கவில்லை. தேர்தல் முடிந்து முதலமைச்சராக பதவி ஏற்கும் முன்னரும் பின்னரும் விஜயகாந்தை சந்தித்து ஸ்டாலின் நெகிழ வைத்தார். இதே போல் உதயநிதியும் கூட வீடு தேடிச் சென்று விஜயகாந்திடன் ஆசி பெற்றார்.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக – தேமுதிக கூட்டணி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுக தரப்பை தேமுதிகவில் இருந்து தொடர்பு கொண்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால் திமுக தரப்பிடம் இருந்து சாதகமான பதில் எதுவும் வராத நிலையில் தனித்து களம் இறங்குவது என விஜயகாந்த் முடிவெடுத்துள்ளார். ஏனென்றால் தேர்தல் நடைபெறும் ஒன்பது மாவட்டங்களிலுமே தேமுதிகவிற்கு கணிசமான வாக்கு வங்கி உண்டு. மேலும் கட்சி கட்டமைப்பும் இந்த ஒன்பது மாவட்டங்களில் தேமுதிகவிற்கு பலமாகவே உள்ளது. மேலும் வேட்பாளர்களுக்கு தேமுதிக தலைமை பணம் கொடுத்து உதவ முன்வந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.

இதனை அடுத்து தேர்தல் அறிவிப்பு வெளியான உடனேயே ஒன்பது மாவட்டங்களிலும் தேமுதிக நிர்வாகிகள் சுறுசுறுப்பாகியுள்ளனர். மேலும் தேர்தலை எதிர்கொள்ள என்னென்ன செய்ய வேண்டும் என்று மேலிடத்தில் இருந்து சில அறிவுறுத்தல்களும் மாவட்டச் செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பெறும் வாக்கு சதவீதம் அடுத்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு உதவும் என்பதால் சீரியசாக பணியாற்றுவது என தேமுதிக மேலிடம் மட்டும் அல்ல தொண்டர்களும் முடிவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

click me!