மேற்குவங்கத்தில் நாளையுடன் தேர்தல் ஓய்வு... மீண்டும் சுறுசுறுப்படையும் தமிழக அரசியல் களம்..!

By Asianet TamilFirst Published Apr 28, 2021, 9:28 AM IST
Highlights

மேற்கு வங்கத்தில் நாளையுடன் 8-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைய உள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மீண்டும் சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

அஸ்ஸாமில் மூன்று கட்டங்களாக நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி முடிவடைந்தது. இதேபோல தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6 அன்று தேர்தல் முடிவடைந்தது. ஆனால், மேற்கு வங்காளத்தில் மார்ச் 27-ஆம் தேதி தொடங்கிய தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் 7-ஆம் கட்டத்தேர்தல் ஏப்ரல் 26 அன்று 34 தொகுதிகளில் நடைபெற்றது.


இந்நிலையில் இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப்.29) 35 தொகுதிகளில் நடைபெற உள்ளன. எனவே, நாளையோடு மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்குமான தேர்தல் முடிவடைகிறது. மேற்கு வங்கத்தில் நாளை தேர்தல் முடிவடைய உள்ளதால், எக்ஸிட் போல் என்றழைக்கப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடுவதற்கு உள்ள தடையும் முடிவடைகிறது. நாளை மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றவுடன், எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடலாம். வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுவதால், அதன் பிறகு எக்ஸிட் போல் முடிவுகளை ஊடகங்கள் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து 22 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் வாக்கு எண்ணிக்கை நாளுக்காகக் காத்திருக்கின்றன. தேர்தல் முடிந்ததையடுத்து கடந்த மூன்று வாரங்களாக தமிழக அரசியல் களம் சுணக்கத்தில் இருந்துவருகிறது. நாளை எக்ஸிட் போல் முடிவுகள் வெளியானது முதல் மே 2-இல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தெரியும்வரை தமிழக அரசியல் களம் மீண்டும் சுறுசுறுப்படையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

click me!